பெய்ரூட்: இஸ்ரேல் உடனான போரில் வெற்றி பெற்று விட்டதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே மோதல் தொடங்கி பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பின்னர் முதன்முறையாக ஹிஸ்புல்லா இதனை அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் 27ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 4 மணிக்கு தொடங்கியது. போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது ஆரம்ப கட்டத்தில் இரண்டு மாதகாலம் அமலில் இருக்கும். ஒப்பந்தத்தின் படி லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் விலகிக் கொள்ள வேண்டும். அதே போல இஸ்ரேல் படையினரும் தங்கள் நாட்டு எல்லைக்கு திரும்புவார்கள். ஆயிரகணக்கான லெபனான் படைகள், ஐநா அமைதிபடை வீரர்கள் லெபனானின் தெற்கு பகுதியில் நிறுத்தப்படுவார்கள்.போர் நிறுத்தம் அமலில் உள்ளதா? என்பதை அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு கண்காணித்து வருகிறது.
லெபனானில் கடந்த 13 மாதத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3760 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2000த்துக்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இயக்கத்தினரை கொன்றிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனானின் மீது நடைபெற்ற தாக்குதல் காரணமாக 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதையும் படிங்க: திரெளபதி முர்மு தமிழக பயணம்: உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை!
இதனிடையே, ஹிஸ்புல்லா இயக்கம் வெளியிட்டுள்ள செய்தியில், "நீதி என்ற காரணம் நம்முடன் இருந்ததால் சர்வவல்லமையுள்ள கடவுளிடமிருந்து இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இஸ்ரேலின் எதிரி மனப்பான்மையுடன் கூடிய லட்சியங்கள் மற்றும் அதன் தாக்குதலை எதிர்கொள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் முழுமையான அளவு தொடர்ந்து தயார் நிலையில் இருக்கின்றனர்.
இஸ்ரேல் படையினர் முயற்சி தோற்று விட்டது. அவர்கள் எந்த ஒரு நகரையும் ஆக்கிரமிக்கவில்லை. எந்த ஒரு இடத்திலும் படையை நிறுத்தவில்லை.கடைசி தினம் வரையிலான ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்ரேலை குறிவைத்து ஹிஸ்புல்லா படையினர் தாக்குதல் நடத்தினர்,"என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி தெற்கு லெபானில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை அகற்றி விட்டு, இஸ்ரேல் எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவில் லிட்டானி நதியின் வடக்கு பகுதிக்கு அப்பால் ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்