சென்னை : புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், "2024-25ம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என அரசுத் தரப்பில் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு 2005ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. புதுச்சேரி மாநிலத்திற்கு என தனியாக விதி உள்ளது. அகில இந்திய அளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வகையில், நிர்வாக ஒதுக்கீடாக இருப்பதால் அரசுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை" என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "2023ம் ஆண்டு தேசிய மருத்துவ கவுன்சில் புதிய அரசாணையின் படி, மருத்துவ இடங்களை ஒதுக்க வேண்டும்.
இதையும் படிங்க : சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு; விரைவாக விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
மேலும், இந்திய அளவில் கவுன்சிலிங் இணையதளம் மூலமாகவே நடத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் நடத்தக்கூடாது. அரசுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் தனியார் நிறுவனம் தனது நிர்வாக இடங்களை நிரப்ப முடியாது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் அவ்வப்போது இட ஒதுக்கீடு கொள்கைகள் மாற்றப்படலாம். மருத்துவ இட ஒதுக்கீடு கொள்கை மாற்றப்படுவதன் மூலம் விளிம்பு நிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ கனவு நிறைவேறும். அதனால், சிறுபான்மை கல்லூரி என்பதற்காக இட ஒதுக்கீடு வழங்க முடியாது என கூற முடியாது. மருத்துக்கல்லூரி மத்திய அரசுக்கான ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.