தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மீன்பிடி, பாதுகாப்பு குறித்து ஆலோசனை; இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு குறித்து இலங்கை அதிபர் தகவல்! - Jaishankar Srilanka visit - JAISHANKAR SRILANKA VISIT

மீன்பிடி, பாதுகாப்பு, சுற்றுலா, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் கலந்துரையாடியதாக இலங்கை அதிபர் திசநாயகே தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜெய்சங்கர் மற்றும் திசநாயகே
எஸ்.ஜெய்சங்கர் மற்றும் திசநாயகே (Credits - Dr. S. Jaishankar X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 8:09 PM IST

கொழும்பு:அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவரான அனுரா குமார திசாநாயகே இலங்கை அதிபராக கடந்த மாதம் 23 ஆம் தேதி பொறுப்பேற்றார். அவர் பதிவியேற்ற இரண்டு வாரத்துக்குள் முதல் வெளிநாட்டு பிரமுகராக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இன்று (அக்டோபர் 4) இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன, இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரி சந்தோஷ் ஜா ஆகியோர் கொழும்பு விமான நிலையத்தில் ஜெய்சங்கரை வரவேற்றனர். தமது இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இலங்கை அதிபர் திசநாயகேவை, ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இலங்கை அதிபர் அனுரா குமார திசாநாயகேவை கொழும்பில் இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு, இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.

இந்தியா - இலங்கை இருதரப்பு உறவில் திசநாயகேவுக்கு உள்ள அக்கறைக்காக அவரை பாராட்டுகிறேன். இரு நாட்டு மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது" என்று ஜெய்சங்கர் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.

அவரை தொடர்ந்து, இலங்கை அதிபர் திசநாயகே வெளியி்ட்ட எக்ஸ் பதிவில், "சுற்றுலா, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா - இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் கலந்துரையாடினேன். மீன்பிடி, பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவை குறித்த இருதரப்பு ஒத்துழைப்பு தொடர வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்பதை ஜெய்சங்கர் மீண்டும் உறுதியளித்தார்" என்று திசநாயகே தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, ஒருநாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, இலங்கை வெளியுறவுத் துறை விஜிதா ஹேரத் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details