சியாட்டில்: அமெரிக்காவில் பிறந்தவர் என்பதற்காக அமெரிக்க குடியுரிமை பெறும் உரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தவிட்டதற்கு அமெரிக்கா முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 22 மாகாணங்களில் ஐந்து வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மேலும் குடியேற்ற உரிமை அமைப்பு குழுக்களும் டிரம்ப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமையை மறுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்காலிக தடை விதித்துள்ளது. டிரம்ப்பின் உத்தரவு என்பது அபட்டமான அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் நீதிபதி விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 14ஆவது திருத்தத்தின்படி அமெரிக்க மண்ணில் பிறந்தவருக்கு குடியுரிமை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. போருக்குப் பின்னர் முன்னாள் அடிமைகளுக்கு குடியுரிமை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் 1868ஆம் ஆண்டு இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர் இதனை தடுக்கும் வகையிலான நிர்வாக உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார்.
டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவின்படி அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியிருக்கும் பெற்றோருக்கு பிப்ரவரி 19ஆம் தேதிக்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அமெரிக்க முகமைகள் எந்த ஆவணமோ அல்லது இது போன்று பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை அங்கீகாரம் அளிக்கும் அரசின் ஆவணமோ வழங்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வலிப்பு நாடகமா? ஞானசேகரன் தொடர்பில் காவலர்கள்... 'ஃப்ரீ பிரியாணிக்காக பேசுவோம்'.. வழக்கில் நடப்பதென்ன?
டிரம்பின் உத்தரவு நாடு முழுவதும் உடனடியாக சட்டப்பூரவ எதிர்ப்பை எதிர்கொண்டது. 22 மாகாணங்களில் இது தொடர்பாக 5 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன், அரிசோனா, ஒரேகான், இலினாய்ஸ் ஆகிய இடங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் முதலில் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து பேசிய மாவட்ட நீதிபதி ஜான் கோஃபெனூர், "நான் நான்கு தசாப்தங்களாக நீதிமன்ற அமர்வில் இருக்கின்றேன். இதைப் போன்றதொரு கேள்வி இவ்வளவு தெளிவாக வேறு எந்த வழக்கிலும் எனக்கு எழவில்லை. இது ஒரு அப்பட்டமான சட்டவிரோத உத்தரவு,"என்று நீதித்துறை வழக்கறிஞரிடம் கூறினார்.
நீதிமன்றத்தின் தற்காலிக தடை காரணமாக 14 நாட்களுக்கு டிரம்ப்பின் உத்தரவு அமல்படுத்த முடியாது. இந்த காலகட்டத்துக்குள் இந்த வழக்கு குறித்தும் மேலும் தங்கள் தரப்பு வாதங்களை தாக்கல் செய்யும்படி நீதிபதி கூறியுள்ளார். மேலும் வரும் பிப்ரவரி 6ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
நீதிபதியின் கருத்து குறித்து நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில்,"அதிபரின் உத்தரவை சார்ந்தே இருக்கின்றோம். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 14வது சட்டத்திருத்தத்தில் சரியான முறையில் இடையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து அரசின் தரப்பு வாதத்தை முழுமையாக நீதிமன்றத்தில் எடுத்து வைப்போம். வேறு வழியில்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என அமெரிக்க மக்கள் நம்புகின்றனர்,"என்று கூறப்பட்டுள்ளது.