கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொத்து வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக யோஷிதா ராஜபக்சே மீது போலீசார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். முன்னாள் கடற்படை அதிகாரியான இவர், ராஜபக்சே அதிபராக இருந்த போது 2015ஆம் ஆண்டுக்கு முன்பு சொத்து ஒன்றை வாங்கும்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பெலியாட்டா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மூன்று மகன்களில் இவர் இரண்டாவது மகனாவார். கதிர்காமம் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த கோத்தப்பய ராஜபக்சேவிடம் இதே வழக்கின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: "வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவலை பரப்ப வேண்டாம்" - தமிழ்நாடு அரசு
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மீதான மனுவில் தமது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் அவர்களை பாதுகாப்பு பணிக்கு நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில்தான் ராஜபக்சேவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுரகுமார திசநாயகே தலைமையிலான அரசு கடந்த நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, இன்னொரு சொத்து விவகார வழக்கு ஒன்றில் மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகனும் எம்பியுமான நமல் ராஜபக்சேவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே போல ராஜபக்சேவிடம் பணியாற்றும் ஒருவரிடமும் இதே வழக்கில் போலீசார் விசாரணை செய்தனர்.
2005-ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளுக்கு காரணமான ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவார் என்று அதிபர் தேர்தலின் போதே அதிபர் அனுரகுமார திசநாயகே வாக்குறுதி அளித்தார். அதன்படியே இப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.