ஹைதராபாத்:அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் எம்.ஜம்பர் மற்றும் இ்ங்கிலாந்தைச் சேர்ந்த டெமிஸ் ஹசாரிஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. புரதங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் புரதங்கள் எனும் பல்வேறு வகை வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன எனவும், மனித உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாக கருதப்படும் புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில், அமினோ அமிலங்களின் வரிசைக்கும், புரதங்களின் கட்டமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்த ஆராய்ச்சிக்காக, விஞ்ஞானிகள் மூவருக்கும், இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரான டேவிட் பேக்கர், அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார். இது தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் புதிய புரதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.
இதையும் படிங்க:இயற்பியலுக்கான நோபல் பரிசு: இயந்திர கற்றலில் சாதனை! அவர்கள் செய்தது என்ன?
விஞ்ஞானிகள் ஜான் எம். ஜம்பர், டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இணைந்து, 'ஆல்பாஃபோல்ட் 2' எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை கடந்த 2020 இல் அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்ட கிட்டத்தட்ட 200 மில்லியன் (20 கோடி) புரதங்களின் கட்டமைப்புகள் கணிக்கப்பட்டுள்ளன என்று வேதியியலுக்கான நோபல் கமிட்டியின் தலைவரான ஹெய்னர் லிங்கே கூறியுள்ளார்.
இச்செயற்கை நுண்ணறிவு மாதிரி, கடந்த நான்காண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும், நோய் எதிர்ப்பு மருந்துகள் (antibiotics), பிளாஸ்டிக் கட்டமைப்பை உடைப்பது தொடர்பான என்சைம்களின் ஆராய்ச்சிகளில் ஆல்பாஃபோல்ட் 2 எனும் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு பெற உள்ளவர்களில் ஒருவரான டேவிட் பேக்கர் அமெரிக்காவின் சியாட்டலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். ஜான் எம். ஜம்பர், டெமிஸ் ஹசாபிஸ் இருவரும் லண்டனில் உள்ள 'கூகுள் டீப்மைண்ட்' நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. இதில் டேவிட் பேக்கருக்கு பாதி தொகையும், ஜான் எம். ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸுக்கு மீதி் தொகையும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.