இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் அசிப் அலி ஷர்தாரி சுமூக தீர்வு கண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்த முன்னாள் தேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், ராஜா ரியாஸ், பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஷெபாஸ் ஷெரிப் அமைச்சரவையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கு இடம் அளிப்பதாகவும், அதேநேரம் சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி அமைக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உறுதுணையாக இருக்கும் என்றும் பேசி முடிவு எடுத்து உள்ளதாக தெரிவித்தார்.