ஹோட்டலில் சாப்பிட்ட சில உணவுகள் நமது நாவிற்கு பிடித்ததை போல மனதிற்கு நெருக்கமானதாக மாறிவிடும். அப்படியான ஒரு உணவு தான் வெஜிடபிள் குருமா. ஹோட்டலில் ரசித்து ருசித்து சாப்பிட்ட இந்த குருமாவை வீட்டில் செய்து பார்த்தாலும் அதே சுவையில் வருமா என்றால், பெரும்பாலும் இல்லை என்பது தான் பலரது பதிலாக இருக்கிறது. அந்த வகையில், ஹோட்டல் சுவையில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் - 2
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 2
- கேரட் - 1 கப்
- பீன்ஸ் - 1 கப்
- பச்சை பட்டாணி - 1 கப்
- உருளைக்கிழங்கு - 1 கப்
- காலிஃபிளவர் - 1 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- பட்டை - 1 துண்டு
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 5
- அன்னாசி பூ - 1
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- எண்ணெய், உப்பு, தண்ணீர்- தேவையான அளவு
- கறிவேப்பில்லை, கொத்தமல்லி - 1 கொத்து
மசாலா விழுது அரைக்க..
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- முந்திரி பருப்பு - 10
- கல் பாசி - 1 டீஸ்பூன்
- உடைத்த கடலை - 1 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
வெஜிடபிள் குருமா செய்முறை:
- குருமா செய்வதற்கு தேவையான காய்கறிகளான பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் மற்றும் பச்சை பட்டாணியை இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்கவும். (குக்கரில் வேக வைக்கக்கூடாது)
- இதற்கிடையில், ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரிப்பருப்பு, சோம்பு, கல்பாசி, பொட்டுக்கடலை மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ போடவும்.
- அடுத்ததாக வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- அதனை தொடர்ந்து, தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
- மசாலாவின் பச்சை வாசனை போனதும் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் சேர்த்து கிளறவும். பின்னர், அரைத்து வைத்த மசாலா விழுதை கடாயில் சேர்த்து கிளறிவிடவும்.
- கூடவே தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை தூவி அடுப்பை அணைத்தால் ஹோட்டல் ஸ்டைல் வெஜிடெபிள் குருமா ரெடி..
இதையும் படிங்க:
வீடே மணக்கும் டேஸ்டியான குஸ்கா ..பக்குவமாய் இப்படி செய்து பாருங்கள்!
புத்தாண்டை வரவேற்க சூப்பரான பால் பாயாசம்..ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!