கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் காதலர் தின மலர் ஏற்றுமதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து, அதிக அளவில் வெளிநாடுகளுக்கு மலர் ஏற்றுமதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் ஈட்டப்படுவது வழக்கம். இதனால் இந்தப் பகுதியில் பெரும்பாலும் மலர் விவசாயமானது அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில், இந்தாண்டு திடீரென கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மலர்கள் இறக்குமதி செய்யப்படுவதாக வரும் தகவலால் மலர் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் பிளாஸ்டிக் மலர்கள் வரவு காரணமாக கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி ஹரீஷ் தெரிவிக்கையில், ''வழக்கமாக காதலர் தினத்திற்காக மலர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும். அரசு உதவியுடன் வங்கியில் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை முதலீடாக கடன் பெற்று, மலர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்து, உரமிட்டு பராமரித்து மலர் உற்பத்தி செய்ய 45 லிருந்து 50 நாட்கள் வரை ஆகிறது.
பிளாஸ்டிக் மலர்கள் வரத்து
இந்த நிலையில் திடீரென பிளாஸ்டிக் மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு விடுவதால் இங்கு விளைவிக்கப்படும் மலர்களுக்கு விலை கிடைக்காமல் வர்த்தகம் பாதிக்கப்படுவது என்பது தொடர்கிறது. இதனிடையே எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து மலர்கள் இறக்குமதி செய்யப்படுவதாக, கடந்த இரண்டு மூன்று நாட்களாக பரவி வரும் தகவல் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு வரும் தகவல்கள் வதந்திகளா? அல்லது உண்மை நிலையா? என்பது மலர் விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மலர் விவசாயிகளுக்கு இது தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் அதிக அளவில் முதலீடு செய்து மலர் விவசாயம் செய்யப்படுவதால், ஏற்கனவே பிளாஸ்டிக் மலர்கள் வரத்து காரணமாக பெரும் இழப்பை சந்தித்து வருவதுடன் முதலீட்டுக்கான உரிய வருவாய் கிடைப்பதில்லை.
இதையும் படிங்க: 20-வது ரோஜா கண்காட்சி: ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து பணி தீவிரம்!
பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்
இதற்கிடையில் மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டால் மலர் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவதுடன் கடனுக்கான தவணைத் தொகை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
எனவே மலர்கள் இறக்குமதி ஆவது குறித்து உடனே அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்பதுடன் பிளாஸ்டிக் மலர்களை உடனடியாக தடை செய்யவும் வேண்டும். பிளாஸ்டிக் மலர்கள் தடை செய்யப்படாவிட்டால் தொடர்ந்து மலர் விவசாயம் செய்ய இயலாமல் போவதுடன், ஓசூரில் இந்த தொழிலை நம்பி உள்ள பல லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் இந்தியாவிலேயே மண் வளம், நீர் வளம், பருவநிலை சாதகம் போன்ற அம்சங்களுடன் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் பசுமை குடில்கள் அமைத்து காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது.
வெளிநாட்டு வசதிகள்
கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் மிகவும் குறைந்த விலைக்கு நிலங்கள் கிடைப்பதுடன், அந்நாட்டு அரசு மலர் உற்பத்தி செய்வதற்காக இலவசமாக நிலங்களை வழங்குவதுடன் ஏராளமான சலுகைகளையும் வழங்கி விடுகிறது. இதனால் உற்பத்தி செலவு என்பது, நம் நாட்டு விவசாயிகளுக்கு 200 ரூபாய் என்றால் அங்குள்ளவர்களுக்கு 80 ரூபாய் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேபோல ஏற்றுமதிக்கான விமான கட்டணங்கள் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்து உள்ளதால், ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மலர்களின் அளவு தற்போது குறைந்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக காதலர் தினத்திற்கு ஒரு மலர் 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில், ஏற்கனவே அதற்கான உற்பத்தி செலவாக சுமார் 22 ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், ஒரு மலர் 15 ரூபாய் அளவு விலை போகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்து இருக்க வேண்டிய நிலையில், மலர் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் ஏற்றுமதியும் குறைந்து காணப்படுவதால் மலர் வர்த்தகமும் குறைய வாய்ப்புள்ளது. எனினும் இம்மாதம் 8ம் தேதிக்கு பிறகுதான் மலர் வர்த்தகம் குறித்து முழுமையான விவரம் தெரிய வரும்.
கடந்த ஆண்டு சுமார் இரண்டு கோடி மலர்கள் வரை ஏற்றுமதி ஆன நிலையில், இந்த ஆண்டு 50 சதவிகிதம் குறைந்து ஒரு கோடி மலர்கள் வரை ஏற்றுமதியாக வாய்ப்பு உள்ளது'' என தெரிவித்தார்.