ரயில்கள் தொடர்பான அனைத்து வேலைகளையும் சுலபமாக்கி வந்த ஐ.ஆர்.சி.டி.சி செயலிக்கு இனி வேலை கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘சுவா-ரயில்’ (SwaRail), எனும் புத்தம் புதிய சூப்பர் செயலியை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது தான் இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த செயலியை தேசிய ரயில்வே தகவலமைப்பு மையம் (CRIS - Centre for Railways Information Systems) உருவாக்கி வெளியிட்டுள்ளது.
‘சுவா-ரயில்’ சூப்பர் செயலியில் முன்பதிவு பயணச்சீட்டு, முன்பதிவில்லா பயணச்சீட்டு, ரயில் நிலையம் உள்நுழைவு நடைமேடை டிக்கெட், பார்சல் தொடர்பான தகவல்கள், ரயில் நேரம் மற்றும் முன்பதிவு தொடர்பான தகவல்கள், உணவு முன்பதிவு, புகார்கள் (Rail Madad) என அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.
தற்போது, சோதனைக்காக பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த செயலி வழங்கப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து ரயில்வேயின் சூப்பர் செயலி புதுப்பிக்கப்படும். இதனையடுத்து, அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் இது வெளியிடப்படும். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய தளங்களில் இருந்து ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்கள் ‘சுவா-ரயில்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுவா-ரயில் சூப்பர் செயலியின் சிறப்பம்சங்கள் என்ன?
ஒரு லாகின் போதும்: பயனர்கள் இனி சுவா-ரயில் சூப்பர் செயலியில் மட்டும் பதிவு செய்து லாகின் தகவல்களை பெற்றால் போதும். அந்த பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல்லை (Password) மட்டும் வைத்துக்கொண்டு ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), ரயில் கனெக்ட் (RailConnect), யூடிஎஸ் மொபைல் ஆப் (UTS Mobile App) மற்றும் ரயில் சேவைகள் தொடர்பான பிற தளங்களை அணுக முடியும்.
இதையும் படிங்க: சாட்ஜிபிடி, டீப்சீக்-க்கு போட்டியாளர் ரெடி; 6 மாதங்களில் தயாராகிறது இந்திய ஏஐ மாடல்! |
அனைத்தும் ஒரு செயலியில்: தற்போதைய சூழலில், ரயிலில் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த பல தளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த வேண்டியது இருக்கும். இனிமுதல் முன்பதிவு பயணச்சீட்டு, முன்பதிவில்லா பயணச்சீட்டு (Unreserved tickets), நடைமேடை நுழைவுச்சீட்டு (Platform ticket), பார்சல் தொடர்பான தகவல்கள், ரயில் நேரம் மற்றும் முன்பதிவு தொடர்பான தகவல்கள், உணவு முன்பதிவு, புகார்கள் என இன்னபிற ரயில் சேவைகளை இந்த சூப்பர் செயலியின் வாயிலாக நிகழ்த்தலாம்.
ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள்: முன்பதிவு விவரங்களுடன் ரயில் தொடர்பான தகவல்களும் இனி இணைக்கப்படும். இந்த செயலியில் ரயில்வேயின் அனைத்து நடைமுறைகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
எளிதாக்கப்பட்ட உள்நுழைவு: லாகின் செய்வதற்கு சிரமமில்லாமல் இருக்க, அவற்றையும் சுவா-ரயில் செயலி எளிதாக்குகிறது. ரயில் கனெக்ட் அல்லது யூடிஎஸ் தகவல்களைக் கொண்டு சூப்பர் செயலியில் பயனர்கள் உள்நுழைய முடியும்.
Dear User,
— Centre For Railway Information Systems (@amofficialCRIS) January 31, 2025
Your wait is over!! Indian Railways 🚂 is offering its SuperApp 📲 for Beta Test.
💎 The Indian Railways - SuperApp is a one-stop solution offering multiple public facing services of Indian Railways.
எளிமையான லாகின்: இனிமுதல் நாம் மொபைலில் பதிவு செய்திருக்கும் கைரேகை தகவல்களைக் கொண்டே சூப்பர் செயலியில் எளிமையாக உள்நுழைய முடியும்.
சுவா-ரயில் சூப்பர் செயலி பதிவிறக்கம் செய்வது எப்படி?
- ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர், ஐபோன் பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் தளங்களில் இருந்து CRIS வெளியிட்ட சுவா-ரயில் (SwaRail) செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- புதிய பயனர்கள் குறைந்த அளவு தகவல்களை கொடுத்து உள்நுழையலாம்.
- ரயில் கனெக்ட் அல்லது யூடிஎஸ் மொபைல் செயலி பயனர்கள், தங்களின் லாகின் தகவல்களை வைத்து சுவா-ரயில் செயலியை பயன்படுத்தலாம்.
பயனர்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம்
இந்திய ரயில்வே அமைச்சகம், ‘சுவா-ரயில்’ சூப்பர் செயலியின் பீட்டா பதிப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் படி கோரிக்கை வைத்துள்ளது. மேலும், பயனர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பட்டியலிட்டு பகிர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் வாயிலாக சுவா-ரயில் செயலியை இன்னும் எளிமையாக மக்கள் மொபைல் போன்களுக்கு கொண்டு செல்ல முடியும் என ரயில்வே அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.