டெல்லி: காசா - இஸ்ரேல் இடையிலான போர் ஒராண்டை நெருங்கி நீடித்து வரும் நிலையில், கடந்த மே 26ஆம் தேதி ராபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ராபாவின் பக்கம் திரும்பியது. இஸ்ரேலின் செயலை இனப்படுகொலை என அறிவித்த சர்வதேச நீதிமன்றம், ராபாவில் இருந்து உடனடியாக இஸ்ரேலிய படைகளை வெளியேற்றுமாறு உத்தரவிட்டது.
இதனிடையே அண்மையில் நடைபெற்ற ஐநா பொது சபை கூட்டத்தில், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இருப்பினும் அங்கு மோதல் போக்கு குறைந்தபாடில்லை. தினம் தினம் குண்டுவெடிப்பு சத்தங்களும், அழுகுரல்களும் கேட்ட வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை மாலத்தீவுக்குள் நுழைய தடை விதித்து அந்நாட்டு அதிபர் முகமது முய்சு உத்தரவிட்டுள்ளார். இதற்காக இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள அதிபர் முகமது முய்சு தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலஸ்தீன மக்களுக்காக நிதி திரட்டவும் அதற்காக ஒரு தூதரை நியமிக்கவும் மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் வெளியான நிலையில், தற்போது மாலத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்து் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
ராபா மீதான இஸ்ரேலிய அரசப் படைகளின் தாக்குதல்களுக்கு மாலத்தீவு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 1990ஆம் ஆண்டுகள் வாக்கில் இதேபோல் இஸ்ரேல் மீது மாலத்தீவு பயணத் தடை விதித்து இருந்தது. பின்னர் அந்த தடை 2010 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டு இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு பேணப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இது மாலத்தீவின் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 0.6 சதவீதமாகும். இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் மாலத்தீவுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க:நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க களேபரம்.. கேரளா பயணியால் அக்கப்போறு! - Air India Express Emergency Landing