புனோம் பென்:கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் அமைந்துள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கம்போடியாவின் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து, மோசடி வேலை மோசடிகளில் சிக்கிய இந்தியர்களை வெற்றிகரமாக மீட்டு திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளது.
வேலை தேடுபவர்கள் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் தூதரகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கம்போடியா இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், "கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் கம்போடியாவின் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து, வேலை மோசடிகளில் சிக்கிய இந்திய நாட்டினரை வெற்றிகரமாக மீட்டு திருப்பி அனுப்பியுள்ளது. எச்சரிக்கை: வேலை தேடுபவர்கள், போலி முகவர்களிடம் ஜாக்கிரதை! உதவி தேவையா? தொடர்பு கொள்ளவும்- 85592881676 அல்லது cons.phnompenh@mea.gov.in"என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கம்போடியா இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலி முகவர்கள் மூலம் வேலை மோசடியில் சிக்கிய இந்தியர்களை மீட்பதிலும், திருப்பி அனுப்புவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. போலி முகவர்களின் சைபர் குற்றங்களால் இதுபோன்ற மோசடிகள் அரங்கேறுகின்றன." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"எங்கள் மண்ணில் கால் வைக்கக்கூடாது" - ஐ.நா. சபை பொதுச் செயலாளருக்கு தடைவிதித்த இஸ்ரேல்!
கடந்த செப்டம்பர் 22ம் தேதி போயிபேட்டில், தூதரகம் அளித்த தகவலின் அடிப்படையில், கம்போடிய காவல்துறை இதுபோன்ற வேலை மோசடிகளில் சிக்கிய 67 இந்தியர்களை மீட்டுள்ளது. மேலும் அவர்களை பகுதி, பகுதியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப, தூதரகம் அந்நாட்டு காவல் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மீட்கப்பட்டவர்களில் 15 பேர் செப்டம்பர் 30ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 24 பேர் அக்டோபர் 1ம் தேதி அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள 28 பேர், விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். இந்தியத் தூதரகம் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இணையக் குற்றங்களில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவ உறுதி பூண்டுள்ளது என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சந்தேகத்துக்கிடமான முகவர்கள், சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் கம்போடியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களில் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இதுபோன்ற மோசடிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்தியா திரும்ப விரும்பும் இந்தியர்கள் அவசர தொடர்பு எண் 85592881676 மற்றும் மின்னஞ்சல்கள்: cons.phnompenh@mea.gov.in, visa.phnompenh@mea.gov.in, கம்போடியன் ஹாட்லைன் எண்- 85592686969 ஆகியவை மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.
கடந்த 2022 ஜனவரி முதல் இன்று வரை, புனோம்பென்னில் உள்ள இந்தியத் தூதரகம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இந்த ஆண்டில் முதல் 9 மாதங்களில் இதுவரை 770 பேர், இந்தியத் தூதரகம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கம்போடியா அதிகாரிகள் இந்தியத் தூதரகத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பால் இது சாத்தியமானது என இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்