நீலகிரி: ஊட்டியில் வரும் மே மாதம் நடைபெற உள்ள 20-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, நூற்றாண்டு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று (பிப்ரவரி 03) திங்கட்கிழமை தொடங்கி வைத்துள்ளார்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதமான காலநிலை நிலவும். இவ்வாறு நிலவும் இதமான கோடை சீசன் காலநிலையை அனுபவிப்பதற்காக சுமார் 9 முதல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம்.
அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்கு மே மாதம் 1 ஆம் தேதி முதல் அம்மாதம் இறுதி வரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை கோடை விழா என்ற தலைப்பில் நடத்தப்படுவதும் வழக்கமாகும். இந்தக் கோடை விழாவைக் காண உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிகளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவர். இதனால் மற்ற மாதங்களை காட்டிலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி சுற்றுலா பயணிகளின் வெள்ளத்தில் திளைத்திருக்கும்.
இதையும் படிங்க: ரோஜா செடியில் பூக்கள் பூத்து குலுங்க சூப்பரான 5 இயற்கை உரம்..வீட்டில் இப்படி தயார் பண்ணுங்க!
அவ்வாறு நடத்தப்படும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் 20-வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் மும்மரமாக தொடங்கி உள்ளன. பூங்காவில் உள்ள 4 ஆயிரத்து 201 ரோஜா ரகங்கள் கொண்ட, 32 ஆயிரம் ரோஜா செடிகளில் கவாத்து மேற்கொள்ளும் பணிகளை இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார்.
இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி மற்றும் பூங்கா ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது கவாத்துபணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வரை ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும்.
அவ்வாறு பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. மேலும், கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு ரோஜா கண்காட்சிக்கு ஏராளமானோர் வருகை தருவார்கள் என தோட்ட கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.