சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNUSRB) கூடுதல் காவல் தலைமை இயக்குநரான (ADGP - ஏடிஜிபி) ஐபிஎஸ் அலுவலர் கல்பனா நாயக், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அளித்த புகார் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கக் குறிப்பில், கல்பனா நாயக்கின் உயிருக்கு எந்தவித திட்டமிட்ட அச்சுறுத்தலும் இல்லை எனவும், மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கட்ட ஆய்வுகள், விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து
முன்னதாக வெளியான தகவல்களின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி, கூடுதல் காவல் தலைமை இயக்குநரான கல்பனா நாயக், காவல் தலைமை இயக்குநர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், ஜூலை 28, 2024 அன்று எழும்பூரில் உள்ள தனது அலுவலக அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் சதி வேலை மற்றும் உள்நோக்கம் கொண்ட தாக்குதல் இருப்பதாக சந்தேகிப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கல்பனாவின் கடிதம் உடனடியாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டு, முழுமையான விசாரணை நடத்தக் கோரப்பட்டது என்று விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தீ விபத்து மற்றும் அதன் பின் நடந்த சம்பவங்கள் குறித்த உண்மைகள் மற்றும் காவல்துறையின் விளக்கங்கள் பின்வருமாறு:
நடத்தப்பட்ட விசாரணை
சம்பவம் நடந்த அன்றே, எழும்பூர் எஃப்2 (F2) காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. திருவல்லிக்கேணி துணை ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் (TANGEDCO), தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் மற்றும் ப்ளூ ஸ்டார் ஏசி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தினர்.
பின்னர், வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டு, CCB-I கூடுதல் துணை ஆணையர் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டார். விரிவான விசாரணை நடத்தப்பட்டு, 31 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல், தீயணைப்பு மற்றும் மின் துறைகளின் நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டது.
அச்சுறுத்தல் இல்லை
தற்போது, நிபுணர் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்களின் அறிக்கையில், காப்பர் (தாமிரம்) கம்பிகளில் மின் கசிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெல்லிய அடுக்கு குரோமடோகிராபி (chromatography) மற்றும் வாயு குரோமடோகிராபி சோதனைகளின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதேனும் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயிர் காக்கும் 36 மருந்துகளின் சுங்கவரி ரத்து வரவேற்கத்தக்கது - மருத்துவர்கள் கூறுவது என்ன? |
எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திட்டமிட்ட தீ விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற செயல்கள் நடைபெறவில்லை எனத் தெளிவாகிறது. மேலும், ஏடிஜிபி கல்பனா நாயக் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தோ அல்லது அச்சுறுத்தலோ இல்லை என்பதும் உறுதியாகிறது.
இதனால், வெளியே பரப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட்டுள்ளது எனவும் காவல்துறை தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.