மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் பாபா பக்ருதீன். இவரது வீட்டில், சென்னையிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, இவர் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதனையடுத்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் ஃபக்ருதீன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறாரா, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் முக்கிய ஆவணங்கள், தடயங்கள் எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் அவரது தொலைபேசி உரையாடல் மற்றும் தொலைபேசிகளை கைப்பற்றி என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே கடந்த 2021 ஆம் ஆண்டு பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று அவர் சோதனை மேற்கொண்டனர்.
என்ஐஏ அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். காலை 10 மணியளவில் சோதனை நிறைவடைந்ததையடுத்து, பாபா பாக்குரூதீனை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் அவரிடம் பென்ட்ரைவ் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிகிறது.
என்ஐஏ அதிகாரிகளின் சோதனை மேற்கொண்டதை அடுத்து, பாபா ஃபக்ருதீன் வீட்டு வாசலில் பாதுகாப்புக்காக ஏராளமான போலாசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் மன்னார்குடி பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.