தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ஸ்ரீஐயாறப்பர் சமேத அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயில் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன் கட்டப்பட்டது. அதாவது இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது.
அப்பருக்கு கயிலை காட்சி அளித்த இடம் எனவும் கூறுவர். இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2013ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஜனவரி 26ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் குடுமுழுக்கு விழா தொடங்கிய நிலையில் ஜனவரி 30ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகளும், ஜனவரி 31அம் தேதி 2ஆம் 3ஆம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 4 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
மேலும் குடமுழுக்கு விழா ஆரம்பித்த நாளில் இருந்து காலை மற்றும் மாலை என இரண்டு முறை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று பிப் 2ஆம் தேதி 6 மற்றும் 7ஆம் கால பூஜைகள் செய்து பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையும் படிங்க: தத்ரூபமான நாராயணி தேவி அம்மன்! விளக்குப் பூஜையில் வெளிநாட்டு பெண்கள்!
இதையடுத்து, இன்று (பிப்.3) 8ஆம் கால பூஜைகள் நிறைவு பெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். இந்த கும்பாபிஷேக விழாவில் 92 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 110 சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.