தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை; இஸ்ரேலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் - Ismail Haniyeh Assassination

ISMAIL HANIYEH ASSASSINATION: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹமாஸ் அமைப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இதுவரை எதிர்வினை ஆற்றாத நிலையில், இத்தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சிக்கு, ஹனியே படுகொலையால் பின்னடைவு ஏற்படக்கூடும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

இஸ்மாயில் ஹனியே
இஸ்மாயில் ஹனியே (Credit - AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 11:33 AM IST

டெஹ்ரான் (ஈரான்):இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரின் முக்கிய திருப்பமாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது படுகொலைக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் தான் ஹனியே கொல்லப்பட்டுள்ளதாக ஹாமஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

புதன்கிழமை காலை தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஹனியே வீட்டின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஈரான் துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது. இதனை "கொடூரமான தாக்குதல்" என்று ஹமாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, இஸ்மாயில் ஹனியே தலைநகரில் உள்ள தமது இல்லத்தில் தங்கியிருந்தபோது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் எனவும், அவருடைய பாதுகாவலர்களில் ஒருவரும் இத்தாக்குதலில உயிரிழந்தார் என்றும் ஹமாஸ் அமைப்பு தமது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இஸ்மாயிலின் இல்லம், ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் தரப்பில் பகிரங்கமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இஸ்ரேல் உடனடியாக எதுவும் எதிர்வினை ஆற்றவில்லை.

ரஷ்யா கண்டனம்:இதனிடையே, ஹமாஸ் தலைவரின் படுகொலைக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இது முற்றிலும் ஏற்றுகொள்ள முடியாத அரசியல் படுகொலை" என்று விமர்சித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மிக்கைல் பொக்டோனோ, "இப்படுகொலை சம்பவம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்" என்றும் கூறியுள்ளார்.

பின்னடைவு:ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான பல மாதங்களாக தொடர்ந்து வரும் போரை தற்காலிகமாக நிறுத்தவும், பணைய கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு முன்னெடுத்து வருகிறது. முக்கியமான இத்தருணத்தில் ஹமாஸ் தலைவரின் படுகொலை நிகழ்ந்துள்ளது அமெரிக்காவின் சமாதான முயற்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம், வடக்கு காஜா பகுதியில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன் ஏப்ரல் மாதம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இஸ்மாயிலின் மூன்று மகன்கள் ஒரே நேரத்தில் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் ராணுவத்தின் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இதுவரை 39,360 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 90.900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள், பெண்கள் என 30 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details