கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே விளைநிலத்திற்குச் சென்ற விவசாயி காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வனத் துறையினரின் அலட்சியம் காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால், வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள மலை கிராம பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் தாக்கி வருகின்றன. இதனால் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கர்நாடக மாநிலத்திலிருந்து இடம் பெயர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இதனால், யானைகளில் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து, யானைகள் கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், அவப்பொழுது வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க: "எடுத்தேன் பாரு ஓட்டம்".. ஒற்றை கொம்பு யானையைக் கண்டு பதறி ஓடிய முதியவர் - வீடியோ வைரல்!
இந்த நிலையில் ராயக்கோட்டை அருகே உள்ள பாவாடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன் என்கிற முனியப்பன்(55). இவர் இன்று (பிப்ரவரி 03) அதிகாலை வழக்கம் போல் தனது விளைநிலத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றிக் கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை திடீரென விவசாயி முனியப்பனை தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த முனியப்பனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், முனியப்பனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, கிராம பகுதியில் புகுந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வனத்துறையினரின் அலட்சியம் காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.