தமிழ்நாடு

tamil nadu

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Donald Trump Convict

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 1:30 PM IST

ஆபாச பட நடிகைக்கு தேர்தல் நிதியில் இருந்து பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப்பை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.

Etv Bharat
Former US President Donald Trump (IANS)

நியூ யார்க்:கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்ட நிலையில், ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், தேர்தல் நிதியில் இருந்து ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு வழங்கிய 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை மறைத்தது உள்ளிட்ட 34 குற்றச்சாட்டுகளில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நியூ யார்க் நீதிமன்றம் அறிவித்தது. ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் குறித்து ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 45 வது அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த டொனால்ட் டிரம்ப் மீது அபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதில் கடந்த 2006ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டொனால்டு டிரம்ப் தன்னுடன் சில காலங்கள் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஸ்டார்மி குற்றஞ்சாட்டினார். ஸ்டார்மி டேனியல் கூறியது அப்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வேகமாக பரவின.

அதேநேரம் இந்த குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். இதற்கு முன்னரும் பல்வேறு பெண்கள் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் புகார்களை கூறி வந்த நிலையில் அதையும் அவர் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிபர் தேர்தலின் போது இது பற்றி பேசாமல் இருக்க ஸ்டார்மி டேனியலுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதுவும் அதிபர் தேர்தல் செலவுக்கான நிதியில் இருந்து அந்த பணம் ஸ்டார்மி டேனியலுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தேர்தல் செலவு நிதியில் இருந்து ஆபாச பட நடிகைக்கு வழங்கிய பணத்தை மறைத்தது உள்ளிட்ட 34 குற்றச்சாட்டுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் மீது விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், தான் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி வழக்கின் தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில், அதில் இருந்து சில நாட்கள் கழித்து குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட டிரம்ப் தேர்வு செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் டொனால்ட் டிரம்ப் தான் ஒரு அப்பாவி என்றும் வழக்கில் தன்னை குற்றவாளி என அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள டிரம்ப் மீது கடந்த 2021ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவில் கலவரத்தை தூண்டியதாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:கம்போடியாவில் வேலை மோசடியில் ஏமாற்றப்பட்ட 60 இந்தியர்கள் மீட்பு! - Cambodia Job Scam

ABOUT THE AUTHOR

...view details