பெய்ஜிங்:சீனாவில் எச்எம்பிவி மற்றும் பிற சுவாச தொற்றுகள் பரவுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எவ்வாறு தற்காத்துக்கொள்வது?
சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் ( எச்எம்பிவி-HMPV) தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சீனாவின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இந்த தொற்று அதிகம் பாதிக்கிறது. இதையடுத்து சீன அரசானது பரிசோதனை, கண்டறிதல், தொற்று பாதித்தவர்களை தனிப்படுத்துதல், தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர். இன்னொருபுறம் மருத்துவமனைகள் மற்றும் நெரிசலான காணப்படும் நோயாளிகள் பற்றிய படங்கள் கொண்ட வைரல் வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் அதிகரித்துள்ளன.
எச்எம்பிவி-HMPV என்பது என்ன? எப்படி பரவுகிறது?
மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்பது ஒரு சுவாச பாதையில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இந்த தொற்று பாதிக்கப்பட்டோருக்கு அதிகம் பாதிப்பற்ற லேசான சளி அறிகுறிகள் இருக்கும். குழந்தைகள், முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவையும் இந்த தொற்று ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய தகவல்களின்படி சீனாவில் குறிப்பிடத்தக்க அளவில் எச்எம்பிவி தொற்று அதிகரித்து வருகிறது. ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, ரைனோவைரஸ் மற்றும் கோவிட்-19 இன் நீடித்த பாதிப்புகள் போன்ற பிற நோய்த்தொற்றுகள் அடுத்தடுத்து சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. இந்த நோய்த்தொற்றுகளின் கலவையானது குறிப்பாக வடக்கு சீனாவில் மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார அமைப்புகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை., சிசிடிவி வேலை செய்யவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது!
மருத்துவமனைகளின் அதிகரிக்கும் தொற்று நோய்களுக்கு உள்ளானோரின் கூட்டத்தைக் கொண்ட சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. எச்எம்பிவி உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகள் சீனாவின் சுகாதார கட்டமைப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் சில பிராந்தியங்களில் கல்லறைகளுக்கு வரும் உடல்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இது அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகள் சீனாவின் சுகாதார அதிகாரிகளால் உறுதி செய்யப்படவில்லை.
ஏன் இப்போது இந்த வகையான தொற்றுகள் அதிகரித்திருக்கின்றன?
சீனாவில் எச்எம்பிவி மற்றும் இதர சுவாச தொற்றுகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன. சீனாவில் நிலவும் இப்போதைய குளிர் காலம் காரணமாக எச்எம்பிவி தொற்று அதிகரித்திருக்கிறது. கோவிட் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள்; நீண்டகாலமாக முககவசம் அணிந்திருந்தது, வைரஸ் தொற்றுகளின் பாதிப்புகள் ஆகியவற்றால் சீன மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
எச்எம்பிவி தொற்றின் பொதுவான அறிகுறிகள்
இருமல், மூக்கு ஓழுகுதல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு ஆகிய லேசான அறிகுறிகள் இருக்கக் கூடும். குறிப்பாக தொற்றால் அதிக பாதிப்பு நேரிடக் கூடியவர்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா நேரிடக் கூடும்.
சிகிச்சை
இப்போதைக்கு எச்எம்பிவி தொற்றுக்கு குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசியோ இல்லை. அறிகுறிகளை குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் தொற்று அறிகுறிகள் தென்படுவோர் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும், நீர் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், வலி ஆகியவற்றுக்கான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் மோசமானதாக இருந்தால், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.
எப்படி தற்காத்துக் கொள்வது?
சுத்தம், சுகாதாரத்தை கைகொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். சுவாச தொற்றுக்கு உள்ளானவர்கள், அதற்கான அறிகுறிகளைக் கொண்டவர்களிடம் இருந்து விலகி இருக்கவும். அடிக்கடி தொடும் பகுதிகள், இடங்களை தரைப் பகுதிகளை சுத்தம் செய்யவும். நீங்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும்.
சீனாவில் இருந்து வெளியாகும் நோய் தொற்று குறித்த வீடியோக்கள் கவலைக்கு உரியதாக இருக்கிறது. சுகாதார அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். எச்எம்பிவி தொற்று அதிகரிப்பதைப் பொறுத்தவரை உலகம் முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள் உன்னிபபாக கவனித்து வருகின்றனர். தேவைப்படி அதில் தலையீடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகள்
அறியப்படாத நிமோனியாவைக் கண்டறிய சீன அரசாங்கம் ஒரு கண்காணிப்பு அமைப்பைச் செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு புதிய தொற்று அச்சுறுத்தல்களை மிகவும் திறம்பட கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வரும் செய்திகள், மக்களின் கவலை ஆகியவற்றுக்கு இடையே சீனாவின் சுகாதார அதிகாரிகள் உலக சுகாதார அமைப்பு, இந்த விஷயத்தில் புதிய தொற்று குறித்து ஆதாரம் ஏதும் இல்லை என்று தெளிவு படுத்தி உள்ளன. எச்எம்பிவி தொற்று குறித்து சர்வதேச சுகாதார அறிவுறுத்தல் அல்லது குறிப்பிடத்தக்க எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் இதுவரை விடுக்கவில்லை.