ஒட்டாவா/ கனடா: காலிஸ்தானி ஆதரவாளர்கள் பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலை முற்றுகையிட்டு, பக்தர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக கனடா பிரதமர் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் இருப்பதாகவும், கனடா மக்கள் அனைவருக்கும் அவர்தம் மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாக கடைபிடிக்க உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த தாக்குதலை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கனடா மக்கள் அனைவருக்கும் அவர்கள் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உரிமை உண்டு. இந்த விவகாரத்தை உடனடியாக கவனத்தில்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட பீல் பகுதி காவல்துறைக்கு என் நன்றிகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கனடா எதிர்கட்சித் தலைவரான பியே போயிலியெவர், இந்த தாக்குதலை, ‘எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என கடும் கண்டனத்தை பதிவுசெய்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி மக்களை ஒருங்கிணைத்து இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூக அமைப்பான, ‘இந்து கனடியன் அறக்கட்டளை’ தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் கோயில் மீதான தாக்குதல் காணொளிகளைப் பகிர்ந்து, காலிஸ்தான் பயங்கரவாதிகள் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தது.