சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவியை பா.ஜ.க மகளிர் அணியினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பூ, ராதிகா சரத்குமார், சசிகலா புஷ்பா, விஜயதாரணி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஆளுநரிடம் வழங்கினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாட்டு மக்கள் மனதில் உள்ளது போலவே, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், ‘யார் அந்த சார்’ என்ற கேள்வி எங்கள் மனதிலும் இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசிற்கு என் கண்டத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பெண்கள் உரிமைகளுக்காக வீதிகளுக்கு வந்து போராட முடியவில்லை. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் என்று போராடிய பாஜக மகளிர் அணியினர் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது," என்று தெரித்தார்.
மேலும், "சார் எங்கே இருக்கிறார்? காவல் ஆணையர் சார் இல்லை என்று சொல்கிறார். யாரை காப்பாற்ற இதை செய்கிறீர்கள்? எந்த ஊரை சார்ந்தவர் இந்த சார். எந்த இயக்கத்தை சார்ந்தவர் இந்த சார்? எந்த பகுதியை சேர்ந்தவர் இந்த சார் ? என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்," என பல கேள்விகளை முன்வைத்துப் பேசினார்.
இதையும் படிங்க |
"ஆளுநர் கனிவோடு எங்கள் கருத்தைக் கேட்டறிந்தார். திமுகவால் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னர் பல்வேறு பாலியல் வழக்குகள் திமுக-வை சேர்ந்தவர்கள் மீது போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. போராடும் பெண் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது தான் திராவிட மாடல் அரசு" என்று திமுக-வை கடுமையாக விமரிசித்தார் தமிழிசை.
மேலும், இந்த வழக்கில் சரியான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றவர், சி.பி.ஐ விசாரணை மட்டுமே பாரபட்சமின்றி நடைபெறும் என்று தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 3) வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை, திமுக அரசு பிரகடனப்படுத்திவிட்டதா என கேள்வியெழுப்பினார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்தவர், என் கருத்தோடு அவர் ஒத்துப் போகிறார். இதை இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டேன் என்று தெரிவித்தார்.