சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 52 மாணவ, மாணவிகள், 4 ஆசிரியர்கள், பிற அலுவலர்கள் என மொத்தம் 56 நபர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று (பிப்ரவரி 23) மலேசியாவிற்குக் கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.
2022-2023 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் தேசிய அல்லது மாநில அளவிலும் புகழ் பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்திருந்தார்.
கல்விச் சுற்றுலா:
அங்கு, புத்திரஜெயா சுற்றுலா, பல்கலைக்கழகம் சுற்றுலா, கே.எல்.டவர், கே.எல்.சிட்டி, சாக்லேட் மியூசியம், தமிழ்ச் சங்கம் கூட்டம், பட்டு குகை முருகன் கோயில், ஜென்டிங் ஹைலேண்ட் ஆகிய இடங்களை அவர்கள் பார்வையிட்டுள்ளனர் எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 24) அமைச்சர் அன்பில் மகேஸ் மலேசியா சென்றுள்ள குழுவுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றார்.
விமான நிலையத்தில் சந்திப்பு:
அங்குத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த்தைச் சந்தித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம்.
அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களைப் பன்னாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அந்த வகையில் தற்போது 8வது பயணம். தற்போது அவர்கள் மலேசியா சென்றுள்ளார்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள், என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து:
அதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார். அவரது வாழ்த்துகளை நாங்கள் மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். சூப்பர் ஸ்டாரின் இந்த வாழ்த்துகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் எனத் தெரிவித்து விடை பெற்றோம்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: "திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவை அறிவாலயத்தில் அடகு வைத்துவிட்டன"- பாஜக ராம சீனிவாசன் காட்டம்!
2022-2023 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 4 மன்ற போட்டிகளில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 மாணவர்கள் வீதம் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாணவர்களைப் பாராட்டும் வகையிலும், அவர்கள் அறிவை விரிவுபடுத்தும் நோக்கத்திலும், தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி செலவில் வெளிநாட்டிற்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த சூப்பர் ஸ்டார் @rajinikanth சார்
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 24, 2025
நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம். அப்போது " மாண்புமிகு முதலமைச்சர்… pic.twitter.com/omYV0GjNSE
இதுவரையான கல்விச் சுற்றுலா:
அதேபோல், 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கான அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 20 மாணவர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவர் மற்றும் அலுவலர் ஒருவர் என அனைவரும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6 நாட்களுக்கு ஹாங்காங் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதத்தில் 6 நாட்களுக்கு 42 மாணவர்கள், 3 அலுவலர்கள் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவர் என அனைவரும் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.