சென்னை:குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மர்ம காய்ச்சல் காரணமாக 3 குழந்தைகளும், ராஜஸ்தானைச் சேர்ந்த 1 குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த காய்ச்சல் பாதிப்பிற்கு காரணமான வைரஸ் தொற்று நோய் குறித்து மருத்துவர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர். இதற்கிடையே, ராஜஸ்தானைச் சேர்ந்த மேலும் 2 குழந்தைகளுக்கு அதேபோல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
மர்ம காய்ச்சலும் கிளம்பும் பீதியும்:இதனையடுத்து, இறந்த குழந்தைகளுக்கு எற்பட்ட அறிகுறிகள் பற்றி ஆய்வு செய்த குழந்தை மருத்துவர்கள், சண்டிபுரா வைரஸ் தொற்று அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 4 குழந்தைகளின் இரத்த மாதிரியும், சிகிச்சை பெற்று வரும் 2 குழந்தைகளின் இரத்த மாதிரியும் சேகரித்து புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆய்வு முடிவில்தான் அந்த குழந்தைகள் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டார்களா, இல்லை வேறு எதுவும் புதிய நோய்த்தொற்று ஏற்பட்டு வருகிறதா எனத் தெரியவரும்.
சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன?இந்நிலையில், இந்த சண்டிபுரா வைரஸ் தொற்று குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதாவது, இந்த சண்டிபுரா வைரஸ் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இவை கொசுக்கள், மணல் ஈக்கள் மற்றும் உண்ணி மூலம் பரவுபவையாகும். அவற்றுள் மணல் ஈக்கள் முக்கியமான பரவும் காரணியாக இருக்கிறது. இந்த வகையான ஈக்கள் மணல் கொண்டு கட்டப்பட்டிருக்கும் குடிசை வீடுகளில் அதிகமாக காணப்படுகிறது.