'நமக்கு சோறு தான் முக்கியம்'..இந்த வரிகளை தங்களோடு பொருத்திக் கொள்ளாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? என்ன தான் வகை வகையாக சாப்பிட ஆசைப்பட்டாலும், ஒரு வேளை உணவில் சாதம் இல்லை என்றால் அவ்வளவு தான்..தலைவலி, பசி என அனைத்தும் படையெடுக்க ஆரம்பித்துவிடும். அப்படி, தமிழர்கள் வாழ்வில் இருந்து அகற்ற முடியாத உணவாக இருக்கும் சாதத்தை 30 நாட்களுக்கு சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும்? உங்களுக்குத் தெரியுமா?
எடை இழப்பு?: ஒரு மாதம் அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருந்தால், உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம். அதே போல், கார்போஹைட்ரேடுகள் குறைபாட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வருகிறது. ஆனால், சமச்சீரான உணவிற்கு தினசரி சிறிதளவு அரிசி எடுத்துகொள்வது சிறந்தது.
ஆராய்ச்சி சொல்வது என்ன?: பருமனானவர்கள் ஒரு மாதம் அரிசி சாப்பிடாமல் இருந்தால் 2 முதல் 3 கிலோ குறைவதாக ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் மெட்டபாலிசம் 2018ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் 120 நபர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லதா?:ஒரு மாதம் சாதம் சாப்பிடாமல் இருந்த பின்னர், மீண்டும் வழக்கம் போல நாம் அரிசி உண்ணும் போது எடை மற்றும் இரத்தம் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல், அரிசியை முழுமையாக விடும் பொழுது உடலுக்கு தேவைப்படும் நார்ச்சத்து கிடைக்காமல் போய்கிறது. இதனால், மலச்சிக்கல் போன்ற உபாதைகளும் ஏற்படுகின்றன.