ஹைதராபாத்:மாறிவரும் வாழ்க்கை முறையால், பலரும் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, உலகம் முழுவதிலும் நீரிழிவு நோயினால் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள், சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் மருந்துகளை உட்கொள்வது மட்டுமின்றி, சில உணவு விதிமுறைகளையும் பின்பற்றுகின்றனர்.
ஆனால், சில நீரிழிவு நோயாளிகள், அதான் மருந்து சாப்பிடுகிறோமே..லைட்டாக குடித்தால் எதுவும் செய்யாது என தங்கள் விருப்பப்படி உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனர். இப்படி, நீரிழிவு நோயாளிகள் குடிப்பதன் மூலம் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார் மருத்துவர் மனோகர்.
இன்று இந்த தொகுப்பின் மூலம் சர்க்கரை நோயாளிகள் மது அருந்தலாமா, கூடாதா என்பதையும், மது அருந்தினால் நிரிழிவு நோயாளிகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் மது அருந்தலாமா என டாக்டர் மனோகரிடம் கேள்வி எழுப்பியதற்கு, 'சர்க்கரை நோயாளிகள் எந்த சூழ்நிலையிலும் மது அருந்தக்கூடாது' என எச்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல், 'சர்க்கரை நோயாளிகள் மது அருந்துவது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம்' என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
"கொஞ்சமாக மது அருந்தினால் ஒன்றும் ஆகாது, சர்க்கரை அளவு கட்டுக்குள் தான் இருக்கும்" என நீரிழிவு நோயாளிகள் நினைத்து கொண்டிருப்பது வெறும் கட்டுக்கதையே எனக்கூறும் மருத்துவர், இது ஒரு ஸ்லோ பாய்சன் என்பதை நீரிழிவு நோயாளிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
நரம்பு பாதிப்பு:மருத்துவரின் கூற்றுப்படி, "நீரிழிவு நோயாளிகள், பொதுவாகவே நரம்பு பாதிப்புக்கு ஆளாகின்றனர். இப்படியான சூழ்நிலையில், மது அருந்தினால் மேலும் பிரச்சனை மோசமாகிவிடுகிறது. அதுவும் கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். இவர்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டால் குணமடையும் வாய்ப்பும் மிகக் குறைவு தான். அதனால் தான், கால்விரல்கள் அகற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது" என்றார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்தும்போது, அவர்களின் இரத்த சர்க்கரை அளவு 30 சதவீதம் அதிகரிக்கும் என 2018 ஆம் ஆண்டில் 'நீரிழிவு பராமரிப்பு இதழில்' வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.