மூடுபனியில் காலை எழுந்ததும் குளிருக்கு இதமாக குடிக்கும் பானம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுப்பதை போல ஆரோக்கியமாக இருந்தால் கூடுதல் சிறப்பு தானே? அந்த வகையில், சீரகம், சோம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து செய்யப்படும் இந்த நீர் குளிர்காலத்தில் நாளை தொடங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இந்நிலையில், அதன் நன்மைகளையும், இந்த பானத்தை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ள சீரகம், சோம்பு மற்றும் இலவங்கப்பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்களை உள்ளடக்கியுள்ள சீரகம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட இலவங்கப்பட்டை குளிர்காலத்தில் தொற்று நோய் மற்றும் சளி பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
செரிமானம் சீராகும்: பொதுவாக, குளிர்காலத்தில் சூடான மற்றும் நாவிற்கு சுவையை தூண்டும் ஜங்க் உணவுகளை அதிகளவில் உண்பதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். இதனால் ஏற்படும் வயிறு உப்புசம், வீக்கம் மற்றும் செரிமான அசெளகரியங்களை சீர் செய்ய சோம்பு உதவியாக இருக்கிறது. மேலும், செரிமான நொதிகளை சுரக்கவும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சுதலுக்கு சீரகம் உதவியாக இருக்கிறது.
எடையில் கட்டுப்பாடு: இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும் பண்புகளை இலவங்கப்பட்டை கொண்டுள்ளது. இதனால், அடிக்கடி பசி மற்றும் வகை வகையாக சாப்பிடத் தூண்டும் உணர்வை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், சீரகத்தின் வளர்சிதை மாற்ற நன்மைகள், குளிர்காலத்தில் எடையை பராமரிக்க உதவுகிறது. 2018ல் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், இலவங்கப்பட்டை சப்ளிமெண்ட்ஸ் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவுகள் உள்ளிட்ட இருதய ஆபத்து காரணிகளை மேம்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளது.
உடல் நீரேற்றம்: மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் தண்ணீர் நுகர்வு குறைவது இயல்பு தான். ஆனால், உடல் புத்துணர்ச்சியாகவும் சருமம் சார்ந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க, தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அந்த வகையில், குளிர் காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க இந்த பானம் உதவியாக இருக்கும்.
சுவாச பிரச்சனைகளை தடுக்கிறது: குளிர்காலத்தில் ஏற்படும், இருமல், மூச்சடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுப்பதில் இந்த பானம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த மூன்று பொருட்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலில் ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்கிறது. ஆயுர்வேதத்தில், இலவங்கப்பட்டை இருமல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
நச்சுகளை வெளியேற்றும்: சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் இரண்டும் இயற்கையாகவே நச்சு நீக்கும் குணங்களைக் கொண்டுள்ளன. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மூலம் அவற்றின் வளர்சிதை மாற்றம் இந்த நச்சுகளை வெளியேற்றி, குளிர்காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுக்கிறது.
எப்படி தயார் செய்வது?: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் ஒரு விரல் அளவு இலவங்கப்பட்டை துண்டு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் ஒரு கிளாஸ் அளவிற்கு வற்றியதும் வடிகட்டு வெதுவெதுப்பாக குடிக்கவும்.
இதையும் படிங்க:
கொழுப்பை குறைக்கணுமா? இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.