குளிர்காலத்திற்கு ஏற்ற பழம் என்று வரும் போது, கொய்யாப்பழம் மற்றும் நெல்லிக்காயை கடந்து விட்டு செல்வது கடினம். ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ள இரண்டு பழங்களும் இதன் நன்மைக்காக பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்ய வேண்டும் என்றால்? இரண்டு பழங்களுக்கும் உள்ள வேறுபாடு, அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு, உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வைட்டமின் சி அளவு: கொய்யாவில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. தினசரி ஒரு கொய்யாபழம் சாப்பிடுவது, நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் வைட்டமின் சி தேவையை 200% பூர்த்தி செய்வதாக ஆய்வு கூறுகிறது. மேலும், கொய்யாவில் உள்ள பொட்டாசியம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மறுபுறம், 100 கிராம் நெல்லிக்காயில் 600 முதல் 700 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. கூடுதலாக, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்திவாந்த ஆக்ஸிஜனேற்றங்களான டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் (Tannins and flavanoids) உள்ளன. இரண்டு பழங்களிலும் வைட்டமின் சி சத்து நிறைந்திருந்தாலும், கொய்ய பழத்தை விட நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவு அதிகமாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீதான விளைவுகள்:
கொய்யாவின் அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செல்கள் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு கொலோஜன் (Collagen) உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
நெல்லிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது, குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது, கல்லீரல் செயல்பாட்டை ஆதரிப்பது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதம் மற்றும் நீரிழிவு போன்ற நாட்பட்ட பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கும் வழிவகுக்கும்.
டெல்லி அரசாங்கத்தின், வனம் மற்றும் வனவிலங்கு துறையின் கூற்றுப்படி (Department of Forest and Wildlife), நெல்லிக்காய் வைட்டமின் சி சத்தின் நல்ல மூலமாகும். சளி, இருமல் போன்ற உபாதைகளை சரி செய்வதோடு, செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
செரிமானத்திற்கு சிறந்தது எது?: கொய்யா பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து, மலச்சிக்கலை தடுக்கிறது. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை பராமரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொய்யா பழத்தின் விதைகள், சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள அமிலத்தன்மையை சமநிலை படுத்துவது, குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதன் நன்மைகளுக்காக பழங்காலங்களாக ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரத்த சர்க்கரை மற்றும் இதய ஆரோக்கியத்தில் தாக்கம்: கொய்யாவில் உள்ள குறைந்த அளவு கிளைசீமிக் குறியீடு மற்றும் அதிகளவிலான நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துகிறது. இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. 2016ல் NCBI நடத்திய ஆய்வில், தோல் அகற்றப்பட்ட கொய்யாப்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கல்லீரலை சுத்தப்படுத்தும் நெல்லிக்காய்..3 நாட்களுக்கு இப்படி பயன்படுத்துங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.