காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் 910 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய் இன்று (ஜன.20) பரந்தூருக்கு சென்றார். விஜய் கிராமத்துக்குள் செல்ல தடை விதித்த போலீசார் அவரை மண்டபத்தின் முன்பு வேனில் இருந்து பேசுவதற்கு அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து, பரந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மக்களிடம் பேசிய தவெக தலைவர் விஜய், "பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 910 நாட்களுக்கு மேலாக, நீங்கள் உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டம் குறித்து ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டேன். அது என் மனதை ஏதோ செய்து விட்டது. உடனே உங்களை பார்த்து, பேசியே ஆக வேண்டும் என தோன்றியது. உங்களுடன் நிற்பேன் என சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் இங்கே வந்திருக்கின்றேன் என்று கூறினார்.
இந்நிலையில், விஜய் கூறிய ஏகனாபுரத்தைச் சேர்ந்த சிறுவன் ராகுல் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது சிறுவன் கூறுகையில், "ஊர் எங்களுக்கு வேண்டும். விமான நிலையம் தேவையில்லை, நான் படிக்கும் பள்ளியை அழித்துவிட்டு விமான நிலையம் தேவையா? இந்தப் பள்ளியில் படித்து நாங்கள் பெரிய ஆளாக வேண்டும்.
இதையும் படிங்க: "விமான நிலையம் என்பதை தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது- விஜய் சந்தேகம்
விமான நிலையம் வரவிடாமல் தடுக்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார். நான் பேசியதை மனதில் வைத்து அதனால் தாக்கம் ஏற்பட்டு விஜய் இங்கே வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் ஊராட்சி மன்ற நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் ஊரில் நிறைய போராட்டங்கள் நடத்தினார்கள். கிராமசபை கூட்டத்திலும் 10 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று விஜய் அண்ணா வந்துள்ளார்... ஊரை மீட்டு கொடுப்பேன் என்று கூறியிருந்தார். அதனால் எங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், உங்கள் ஊருக்கு நான் இருக்கிறேன், விமான நிலையம் வர விட மாட்டேன், பேட்டி அழகாக கொடுத்திருக்கிறாய் என்று கூறி கை கொடுத்தார்" என்று சிறுவன் ராகுல் கூறினார்.