சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, “தனது தந்தை காய்ச்சலில் இருந்த போது கோமியம் குடித்து சரிசெய்யப்பட்டது. கோமியத்தில் கிருமிநாசினி உள்ளிட்ட நன்மை அளிக்கும். மருத்துவ குணங்கள் உள்ளது,” என தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஐஐடி இயக்குநர் காமகோடி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இன்று (ஜனவரி 20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆய்வு கட்டுரை அடிப்படையில் கோமியம் குறித்து நான் பேசினேன். கோமியத்தில் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் இருக்கிறதா? என்பதற்கு ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகளை அளிக்கிறேன். அவை அமெரிக்காவில் உள்ள நேச்சர் இதழில் (Nature journal) வெளியிடப்பட்டவை.
மேலும், கோமியத்தின் தயாரிப்பிற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. அதில், கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூஞ்சை எதிர்ப்பு (Anti fungal), ஆன்டி இன்ஃபர்மேடிக்ஸ் (Anti Informatics), பாக்டீரியா (Bacteria) இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர். இது குறித்து தான் அன்றைய நிகழ்ச்சியில் நான் கூறினேன்.
அன்றைய நிகழ்ச்சியில், இயற்கை விவசாயம், பசு சானத்தின் மூலம் கிடைக்கப்படும் எரிவாயு உள்ளிட்ட சில பிரிவுகளில் நான் பேசியிருந்தேன். அதில், கோமியத்தில், பூஞ்சை எதிர்ப்பு, ஆன்ட்டி இன்ஃபர்மேடிக்ஸ், பாக்டீரியா உள்ளது என பேசியிருந்தேன். தற்போது அமேசானில் பஞ்ச காவியம் என்ற பொருளும் விற்பனை செய்து வருகின்றனர். அதற்கு மருத்துவ, அறிவியல்ரீதியாகவும் அனுமதி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: விறகு வெட்ட வேண்டாம் எனக் கூறிய மூதாட்டி அடித்துக் கொலை! கோவையில் பரபரப்பு...!
இந்த விவகாரத்தில், அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை. இது முழுவதும் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள முதல் 10 இதழ்கள் கோமியம் குறித்து ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
இந்தியன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் (Indian School of Medicine) இது குறித்தும் ஆய்வு செய்து தெரிவிக்கலாம். மேலும், சென்னை ஐஐடியில் உள்ள மருத்துவ அறிவியல் (medical science) துறையில் விருப்பப்படுபவர்கள் இது குறித்தும் ஆய்வு செய்யலாம். மேலும், எங்களுக்கு சில பண்டிகைகள் உள்ளன. அந்த பண்டிகையின் பொழுது பஞ்சகவ்யம் சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. அதன்படி அந்த பண்டிகை நாட்களில் நான் பஞ்சகவ்யம் சாப்பிடுவேன்,” என தெரிவித்தார்.