சென்னை: உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்கள் முதலில் நாக்கை தான் பரிசோதிப்பார்கள், ஞாபகம் இருக்கிறதா? இது ஏன் என எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அப்படி, உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் போது சிக்னல் கொடுக்கும் விதமாக நாக்கின் நிறமும் மாறுகிறது.
இதனால் நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு மற்றும் பிரச்னைகளை மருத்துவர்கள் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். நாக்கின் நிறங்கள் என்னென்ன நோய்களுக்கான அறிகுறி என்பதை லண்டனின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
உங்கள் நாக்கின் நிறம் என்ன?:பெரும்பாலும் கருப்பு நாக்கை கெட்ட சகுனத்துடன் தொடர்புப்படுத்தி பேசுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், மருத்துவ அறிவியலின் பார்வையில் நாக்கு கருப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் உள்ளது என்று எச்சரிக்கின்றனர்.
புகைப்பழக்கம், வாய் வறட்சி, அதிகளவு காபி அல்லது பிளாக் டீ குடிப்பது கருப்பு நிற நாக்கிற்கு வழிவகுக்கிறது. சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரையிலான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம் எனவும், வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியால் நாக்கு சாதாரண நிறத்தை விட கருமையாகத் தெரிகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெள்ளை நிறம்:நாக்கில் வெள்ளை படிந்தது போலக் காணப்பட்டால் நோய்த்தொற்று இருப்பதைக் குறிக்கிறது. நீரிழிவு, எச்ஐவி, புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவு காரணமாகவும் நாக்கு வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.