சென்னை:குறைந்த அளவிலான ஆஸ்பிரின் உட்கொள்வதன் மூலம், காய்ச்சல் நோய் தொற்றுகளால் கர்ப்பத்தில் ஏற்படும் இரத்த நாள அழற்சியை குணப்படுத்தலாம் என்பதும், கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடிக்கு சிறந்த ரத்த ஓட்டத்தை உருவாக்கலாம் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆஸ்பிரின் (Aspirin) அல்லது அசட்டைல்சலிசைலிக் (Acetylsalicylic acid) என்பது சலிசைலேட்டுகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்து ஆகும். இவை வலி நிவாரணியாகவும், காய்ச்சல் மற்றும் வீக்கத்திற்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக குறைந்த அளவிலான ஆஸ்பிரின் மாத்திரைகள் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க உதவுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைகழகத்தின் சர்தேச குழு, அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரி டப்ளின் குழுவுடன் இணைந்து, ஆஸ்பிரின் மாத்திரைகளை காய்ச்சல் நோய்த்தொற்றுகளுக்கு பயன்படுத்த முடியுமா என ஆய்வு செய்தது. எலிகள் மீது நடத்தப்பட்ட இவ்வாய்வில் குறைந்த அளவிலான ஆஸ்பிரின் அளிக்கப்பட்ட எலிகள் மேம்பட்ட கரு வளர்ச்சி மற்றும் சந்ததிகளுடன் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தன.
இன்ஃப்ளூயன்ஸா ஏ அல்லது ப்ளூ காய்ச்சல் உள்ள எலிகளின் கருக்கள் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவை ப்ளூ பாதிக்கப்படாத எலிகளைவிட சிறியதாக இருந்தன. மேலும் அவற்றின் கருக்கள் குறைந்த இரத்த ஆக்ஸிஜன் மற்றும் மோசமான இரத்த நாள வளர்ச்சியுடன் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.