சென்னை:பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நடுத்தர வயதில் நினைவாற்றல் மற்றும் சிந்தனைகளில் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பி.சி.ஓ.எஸ்:பி.சி.ஓ.எஸ் அதாவது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic ovary syndrome) என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். பெண்களின் கருப்பைக்குள் இருக்கும் ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் நீர்க்கட்டிகளை ஏற்படுத்தும். இவை கருப்பைக்குள் பெரிதாக வளர்ந்து, கருமுட்டைகளைச் சுற்றி பல நுண் குமிழ்களை உருவாக்குகின்றன. இதனால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உருவாகும். இதுவே பி.சி.ஓ.எஸ் எனப்படுகிறது.
இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை, முகப்பரு, முடி உதிர்வு, முகத்தில் முடி வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்தில் பிரச்சினை, கரு உருவாவதில் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த இனப்பெருக்க கோளாறு. 10 சதவீத பெண்களை பாதிக்கிறது. இது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கருவுறாமை டைப் 2 நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர் ஹீதர் ஜி ஹடில்ஸ்டன், பி.சி.ஓ.எஸ் இதய பிரச்சினைகள், உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அறிவாற்றலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.
பி.சி.ஓ.எஸ் பிரச்சினை மூளை ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த எங்களது ஆய்வில், சிந்திக்கும் திறன், நினைவாற்றல் போன்றவை பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இது ஒரு நபரின் வாழ்க்கை தரம், தொழில் வெற்றி, நிதி பாதுகாப்பு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட சுமார் 907 பெண்களிடம் 30 வருட காலத்திற்கு சோதனை நடத்தப்பட்டது.
இதில் கவன சோதனை (Attention Test) போது, பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு வண்ணங்களில் உள்ள வார்த்தைகளில் பட்டியல் காண்பிக்கப்பட்டு, அந்த வார்த்தையை படிப்பதை விட, மையின் நிறம் அடையாளம் காணச் சொல்லப்பட்டது. உதாரணமாக நடிகர் சமுத்திரகனியின் நடிப்பில் வெளியான சாட்டை படத்தில் வருவது போல, நீலம் என்ற வார்த்தை சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டு, இந்த வார்த்தையின் நிறம் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டன.
இந்த சோதனையில் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் நினைவாற்றல், கவனத்திறன், வாய்மொழித் திறன் சோதனைகளிலும் குறைவான மதிப்பெண் பெற்றிருப்பதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நடுத்தர வயதில் நினைவாற்றல் மற்றும் சிந்தனைகளில் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:உடற்பயிற்சியில் ஆர்வமில்லையா? ரத்தசோகை இருக்கலாம்! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்!