புதுடெல்லி: வேலைக்கு பணம் எனும் பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசில் அமைச்சராக வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணம் வாங்கிக் கொண்டு வேலை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறை வழக்கில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது கருத்துக் கூறிய உச்ச நீதிமன்றம் இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும் எனக் கூறியது.
ஜாமீனில் விடுதலை ஆன செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் மீண்டும் அவர் அமைச்சராக பதவி ஏற்றார். முன்பு அவர் வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையே அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் அளித்திருந்த வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "செப்டம்பர் 26ஆம் தேதி அளித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும்," என்று கூறியிருந்தார்.
பெரிதும் தவறு: இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "ஒரு நபர் விடுவிக்கப்பட்ட தருணத்தில் அமைச்சராகிறார் என்பதை அனுமானிக்க முடியவில்லை. அப்படி ஆனதில் பெரிதும் தவறு இருக்கிறது. யாரேனும் வழக்குகளை கட்டமைக்கலாம், வழக்குகள் இருக்கலாம் என்பதால் வழக்கின் உண்மை தன்மையை, நாங்கள் பரிசீலிக்க வேண்டும். விசாரணை நிலுவையில் இருப்பதால், பணத்தை பறிகொடுத்ததாக வழக்கு தொடுத்த பொதுமக்கள் அனைவரும் சாட்சிகளாக உள்ளனர். பொது ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளனர்,"என்று கூறினர்.
அப்போது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா,"செந்தில் பாலாஜி கணிசமான தாக்கத்தை செலுத்துகிறார். அவர் சிறையில் இருந்தபோது கூட துறைகள் இல்லாத அமைச்சராக இருந்தார். பாலாஜி, தமிழகத்தில் அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறார்,"என்று வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், "பெரும்பாலானோர், எந்த ஒரு மாநிலத்திலும் பெரும் அதிகாரங்களை கொண்டிருக்கலாம். இங்கே அவர் துறை இல்லாத அமைச்சராக இருந்தார்," என்றார். அப்போது குறுக்கிட்ட மேத்தா, இது நீதிமன்ற அறை, இது ஒரு அரசியல் தளம் இல்லை என்றார்.
பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர்?: மனுதாரார் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், வழக்கின் பெரும்பாலான சாட்சிகள் மாநில அரசில் அரசு ஊழியர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் இருக்கின்றனர்.பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் இருந்தால், இப்படியான நிலையில் அவர்அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் அப்போது என்ன நடக்கும்?"என்று கேள்வி எழுப்பினர்.
மனுதாரரின் வழக்கறிஞர் சங்கரநாராயணன்,"வழக்கின் சாட்சிகளில் ஒருவர் மிகவும் பயப்படுகிறார். அதனால் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கிறார்,"என்றார். தாக்கல் செய்யப்பட்டவை குறித்து விசாரணை நடத்திய பின்னர் கருத்துத் தெரித்த நீதிபதிகள், "எத்தனை சாட்சிகள் இருக்கின்றனர். யார் அந்த சாட்சிகள்,"என்பது குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம் என கபில் சிபலை நோக்கி கூறிய நீதிபதிகள், "டிசம்பர் 2ஆம் தேதியன்று நாங்கள் நோட்டீஸ் அளித்தோம். பின்னர் நீங்கள் உத்தரவுகளை பெறும் வகையில் மாற்றம் செய்தோம். இந்த அம்சத்தில் நாங்கள் கவலைப்படுகின்றோம்,"என்று கூறினர்.
ஜனவரி 15 விசாரணை: இந்த விவகாரத்தை ஜனவரி 15ஆம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் கூறியது. அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில், "தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை திரும்ப பெற வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது. "பணத்துக்கு வேலை என்ற மோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதில் இருந்து நீதித்துறைக்கு எதிரான அவரின் அபட்டமான அலட்சியபோக்கால் அவருக்கு எதிரான விசாரண பாதிக்கப்பட்டுள்ளது," என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்றது ஆச்சர்யம் அளிப்பதாகவும், அவரது பதவியின் காரணமாக சாட்சிகள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்" என்றும் கருத்துக் கூறியிருந்தனர். .