குழந்தைகள் வளரும் காலத்தில் பருவகால நோய்களை தடுப்பது சிரமமானதாக இருந்தாலும், சரியான உணவை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று வராமல் தடுக்கலாம். அதிலும், குறிப்பாக, மழைக்காலம் முடிந்து வரும் குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு இயல்பாகவே காய்ச்சல், சளி என தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சரியான உணவுகளை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில், குளிர்காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பேரீச்சம்பழம்: குழந்தைகளுக்கு தினசரி இரண்டு பேரீச்சம்பழம் கொடுப்பதால், உடலில் வளர்சிதை மாற்றம், ஹார்மோன் ஒழுங்குமுறை மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டுதல் போன்றவை சீராக இருக்கும். குளிர்காலங்களில், நமது உடலை சூடாக வைத்திருக்க பேரீச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. பேரீச்சம்பழத்தை நேரடியாகவும் அல்லது, ஸ்மூத்திஸ், பால் போன்றவற்றில் கலந்தும் கொடுக்கலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு: வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய கூறுகளின் சக்திவாய்ந்த மூலமாக இருக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு குழந்தையின் பாதுகாப்பை பலப்படுத்தும் முக்கியமான உணவாக இருக்கிறது. கிழங்கில் இருக்கும், வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் குளிர்காலத்தில் குழந்தைகளை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது. கிழங்கை வேக வைத்து, அல்வா, கோதுமை மாவில் பிசைந்து சப்பாத்தி போன்றவற்றை செய்து கொடுக்கலாம்.
நெல்லிக்காய்: நெல்லிக்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் பண்புகள், சளி, காய்ச்சல், செரிமான பிரச்சனை போன்ற நோய்களை தடுக்கிறது. ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள நெல்லிக்காய் ஜூஸ் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும்.
சிட்ரஸ் பழங்கள்: வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் குழந்தைகளுக்கு வைட்டமின் சி நிறைந்த உணவை கொடுத்து வர, குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
கேரட்: குளிர்காலத்தில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. நோய் தொற்றிற்கு காரணமாக இருக்கும் வெள்ளை அணுக்கள் குறைபாட்டை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.