திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் மணிகண்டன் ( 21). இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறைக்கு சொந்த ஊரான சேரன்மகாதேவி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சேரன்மகாதேவி முருகன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவரின் மகன் மாயாண்டி என்பவர் மணிகண்டனை திடீரென கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த மணிகண்டனை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து மயாண்டி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோட்ராங்குளம் பகுதியில் சொத்து பிரச்சனை காரணமாக நடைபெற்ற கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இதே நெல்லை பாளையங்கோட்டை அருகே மாவட்ட நீதிமன்றம் முன் மாயாண்டி என்பவர் கடந்தாண்டு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். ஒரே நாளில் பழிக்கு பழியாக இரு கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது
நெல்லை மாவட்டத்தில் மேலும் ஒரு கொலை. சேரன்மாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை. ஒரே நாளில் பழிக்கு பழியாக கொடூரமாக நடந்த இரண்டு கொலையால் மக்கள் அதிர்ச்சி