நடுத்தர வயதை எட்டுவதற்குள் குடும்ப பொறுப்பு, பணிச்சூழல், பொருளாதாரம் என நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகும். ஆனால், அப்போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சவாலானதாக மாறிவிடும். குறிப்பாக, 30 வயதிற்கு பிறகு வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஏற்ப வேகமாக ஓட தொடங்கும் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. இந்த நிலையில், 30 வயதுக்கு பிறகு உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. படிந்து பயன்பெறுங்கள்..
நார்ச்சத்து உணவு: 30 வயதுக்கு பிறகு நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். வயதாகும் தொடங்கும் போது வளர்சிதை மாற்றம் குறைவதால் இந்த உணவுகள் மூலம் ஊட்டச்சத்துக்களை பெறலாம். ஓட்ஸ், பேரிக்காய், பயறு வகைகள் மற்றுல் கீரைகளில் நார்ச்சத்து நல்ல அளவில் உள்ளது. இதய நோய், பக்கவாதம், டைப் 2 நிரிழிவு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்க நார்ச்சத்து உட்கொள்வது அவசியம். அதே சமயத்தில், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் இவை உதவுகிறது.
கால்சியம் மற்றும் ஒமேகா 3 உட்கொள்வது: 35 வயதிற்குப் பிறகு எலும்பு அடர்த்தி குறைவது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். எனவே, போதுமான கால்சியம் உட்கொள்வது உங்கள் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்தில் எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான ஒரு நல்ல அணுகுமுறையாகும். குறிப்பாக, 30 வயதிற்கும் அதிகமான பெண்களின் எலும்பு வலிமையை பராமரிக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம்.

அதே போல், இருதய நோய் மற்றும் மூளை ஆரோக்கியத்தின் அபாயத்தைக் குறைக்க ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ள ஊட்டச்சத்து உணவுகள் மனநிலையை அதிகரிக்கும்.
சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடுங்கள்: ஆரோக்கியமான ஹார்மோன் நிலையைப் பராமரிக்க சீரான உணவை உண்ண வேண்டும். பெண்கள் வயதாகும்போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கர்ப்பம் தொடர்பான பிற கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்.
ஹாட் டாக் (Hot Dog) போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். சிப்ஸ் போன்ற உப்பு நிறைந்த உணவுகள் நீரிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: உடலில் மக்னீசியம் குறைபாடு: அதிகரிப்பதற்கான 7 உணவுகள்! |
கொலாஜனில் கவனம் செலுத்துங்கள்: கொலாஜன் என்பது தோல் மற்றும் மூட்டுகளில் பெரும்பாலும் காணப்படும் ஒரு முக்கியமான புரதமாகும். வயதுக்கு ஏற்ப கொலாஜன் தொகுப்பு குறைவது சரும வயதானதற்கான அறிகுறிகளுக்கு பங்களிக்கக்கூடும். உறுதியான மற்றும் இளமையான சருமத்திற்கு கொலாஜன் மிகவும் முக்கியமானது. கொலாஜனை அதிகரிக்க டோஃபு (Tofu), கோழி, முட்டை மற்றும் எலும்பு குழம்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

நீரேற்றம்: தினமும் குறைந்தது 10-12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், இளநீர் மற்றும் கிரீன் டீ குடிக்கவும். இது ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான மூலமாகும். கிரீன் டீ குடிப்பது இதய நோய், நரம்பியல் சீர்குலைவு, முன்கூட்டிய வயதாகும் தோற்றத்தை அளிப்பது மற்றும் பிற நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
கெட்ட பழக்கங்களை விட்டுவிடுங்கள்: புகைபிடிப்பது மது அருந்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இந்தப் பழக்கங்கள் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய் மற்றும் மலட்டுத்தன்மை ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். 30 வயதாகும் போது மது அருந்துவதைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது கருமுட்டையின் தரம் மற்றும் விந்தணுவின் தரம் மற்றும் உற்பத்தியில் தீங்கு விளைவிக்கும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 53.4% பெண்களுக்கு இரத்த சோகை..தடுக்கும் வழி என்ன? |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.