சென்னை:ஒரு மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்றால், விடியல் எப்படி அமைகிறது என்பதை வைத்து புரிந்து கொள்ள முடியும். உடல் சோர்வு, மன அழுத்தம், மூட் ஸ்விங், மறதி என காலை நேரங்களில் நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டால் அதற்கு தூக்கமின்மை முக்கிய காரணியாக அமைகிறது. இது ஒரு புறம் இருக்க, ஸ்லீப் அப்னியா (sleep apnea) எனப்படும் தூங்கும் போது ஏற்படும் மூச்சுத்திணறல் குறைபாடு இப்போது பலரை பாதிக்க ஆரம்பித்துவிட்டது.
sleep apnea என்றால் என்ன?தூங்கி கொண்டிருக்கும் பொழுது ஏற்படும் மூச்சுத்திணறலை அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா (obstructive sleep apnea) என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு கீழ்கானும் அறிகுறிகள் தென்படும். மிக அதிக இரைச்சலுடன் குறட்டை விடுவது, தூக்கம் தடைபடுவது, காலையில் தலைவலி, பகல் நேரத்தில் சோர்வு, கவனச்சிதறல், ஞாபக மறதி போன்றவைகள் இதற்கான அறிகுறிகளாகும்.
நிம்மிதியான தூக்கம் என்பது, மூளையின் செயல்பாடுகளுக்கு ஓய்வு கொடுப்பது தான். குறட்டை விட்டு தூங்குவதன் மூலம், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. தூக்கத்தில் சுவாசிக்க முடியாமல் தவிப்பதால் தான் குறட்டை ஏற்படுகிறது. இது பின் நாட்களில் உயிருக்கே ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.