சென்னை: ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சை முறை மூலம் எந்தவித மருத்துவ பிழையும் ஏற்படாமல் துல்லியமாக அறுவை சிகிச்சையை செய்ய முடியும் என சென்னை மியாட் மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை முறையை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த சிகிச்சை முறை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் குழு, "உலகின் தலைசிறந்த அறுவை சிகிச்சை முறையான ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்துள்ளோம். இந்த சிகிச்சை முறையின் மூலம் கேன்சர், குழந்தை மகப்பேறு உட்பட தலை முதல் கால் வரை அனைத்து அறுவை சிகிச்சைகளையும் துல்லியமாக செய்ய முடியும்.
மருத்துவக்குழு பேட்டி (Credit - ETVBharat Tamil Nadu) சிகிச்சைக்காகும் செலவு: அதே சமயம் மிகவும் பாதுகாப்பான அறுவை சிகிச்சையை செய்ய முடியும். விலையைப் பொறுத்தவரை சராசரியாக ஏதேனும் ஒரு அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டுமென்றால் இந்த அறுவை சிகிச்சை முறையில் அதனுடன் சேர்த்து கூடுதலாக முப்பதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சை முறையால் மனித மருத்துவத்தவர்களை தவிர்க்க முடியும். சிறிய துளைகளில் மருத்துவர்களால் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆனால் இந்த ரோபோடிக்ஸ் முறையை பயன்படுத்தி சிறிய நரம்புகளை கூட துல்லியமாக அறுவை சிகிச்சையில் பாதிப்பில்லாமல் பாதுகாக்கலாம்.
இதையும் படிங்க:புற்றுநோய்க்கு கட்டணமின்றி உலகத்தர அறுவை சிகிச்சை..ஆச்சரியப்படுத்தும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை!
அதேபோன்று ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அதிக நேரமும் உடல் உழைப்பும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த அறுவை சிகிச்சை முறையில் விரைவாகவும் எளிமையாகவும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்பதால், தினமும் கூடுதலான அறுவை சிகிச்சைகளை மருத்துவர்களால் செய்ய இயலும். இருப்பினும் இந்த ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சையை பயிற்சி இல்லாத மருத்துவர்களால் செய்ய இயலாது.
மருத்துவர்களுக்கு பயிற்சி: இதற்கு உரிய பயிற்சியை எடுத்த பின்னர் தான் எந்த ஒரு மருத்துவரும் ரோபோட்டிக்ஸ் முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். அதே சமயம் மருத்துவர்கள் இந்த ரோபோடிக்ஸ் முறையில் அறுவை சிகிச்சை செய்தாலும் அவர்கள் தங்கள் சொந்த கைகளால் செய்வது போன்றே ஒரு அனுபவம் இருக்கும். அதனால் இதில் எந்தவித மருத்துவ பிழையும் ஏற்படாமல் துல்லியமாக அறுவை சிகிச்சையை செய்ய முடியும்.
இது தவிர,புரோஸ்டேட் கேன்சர் நோயாளிகளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவர்களுக்கு விந்தணு நரம்புகள் சில சமயம் துண்டிக்கப்பட்டு ஆண்மை விறைப்புத்தன்மை இல்லாமல் போய்விடும். ஆனால் இந்த ரோபோடிக்ஸ் சிகிச்சை முறையில் அந்த சிறிய நரம்புகள் கூட அறுபடாமல் துல்லியமாக பிரிக்கப்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நீரிழிவு நோயாளிகளை குறிவைக்கும் கண் பிரச்சனை; தீர்வு உண்டா? மருத்துவர் விளக்கம்!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்