தேனி: கம்பம் அருகே நடந்த கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கொலை செய்ய உதவிய இருந்த நபருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகர்ப் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ் (வயது 23). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதேபகுதியில் கணவரை இழந்த நந்தினி (32) என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சதீஷூக்கு போதைப் பழக்கம் இருந்ததால், நந்தினி சதீஷ் உடன் இருந்த தொடர்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நந்தினிக்கு பிரபாகரன் (26) என்ற இளைஞரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சதீஷ், தொலைப்பேசி வாயிலாக நந்தினியைத் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது, நந்தினி பிரபாகரனை வைத்து சதீஷை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், அதற்காக கடந்த 2024 மார்ச் 30ஆம் தேதி சதீஷை வீட்டிற்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, வீட்டுக்கு வந்த சதீஷை நந்தினி மற்றும் பிரபாகரன் இருவரும் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக நந்தினி மற்றும் பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கனிமவள கொள்ளையை எதிர்த்ததால் கொலை? ஜகபர் அலி மரண வழக்கில் 4 பேர் கைது!
மேலும், அந்த விசாரணை அறிக்கை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று (ஜன.20) இந்த வழக்கு நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் கீழ் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணை முடிவுற்று சாட்சியங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் கொலை செய்யத் தூண்டுதல் மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக நந்தினி என்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் அதைக் கட்ட தவறினால் மேலும் ஆறு மாத கால சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
அதேபோல், கொலை செய்த குற்றத்திற்காகப் பிரபாகரன் என்ற நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் 6 மாத கால சிறைத் தண்டனையும் என இருவருக்கும் தனித்தனியே மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே, நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கொலைக் குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைக்கப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.