சென்னை:உயர் ரத்த அழுத்தம் என்பது 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வருவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்த உயர் ரத்த அழுத்தத்தை கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல இணைநோய்கள் வருவதுடன் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
மருத்துவர் ரெபாய் சௌகத் அலி பேட்டி (Credit: ETV Bharat Tamil Nadu) இந்த சூழலில், உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள், RDN (Renal denervation therapy) எனும் சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும் என சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் கார்டியாலஜி பிரிவின் மூத்த மருத்துவர் ரெபாய் சௌகத் அலி கூறியுள்ளார்.
ஆர்.டி.என் சிகிச்சை RDN (Renal denervation therapy) என்றால் என்ன?மூளையில் இருந்து சிறுநீரகத்தை நோக்கி செல்லும் ரத்த குழாயில் மேற்கொள்ளப்படும் ஒரு வகையான சிகிச்சை. காலின் பின்புறத்தில் ஒரு சிறிய துளை போடப்பட்டு அதன் வழியாக கருவியை உள்ளே செலுத்தி ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் மற்றும் கோணலாக உள்ள ரத்த குழாய்களை நிமிர்த்துதல் உள்ளிட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இந்த சிகிச்சை மேற்கொள்ள நோயாளிக்கு எவ்வித மயக்க மருந்தும் செலுத்தப்படுவது இல்லை எனக்கூறும் மருத்துவர்கள், இந்த ஆர்டிஎன் சிகிச்சை மேற்கொள்ள சுமார் ஒன்றரை மணி நேரம் போதுமானது எனவும் கூறியுள்ளனர். இதனால் நோயாளி சிகிச்சை முடிந்த அடுத்த நாளே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆர்.டி.என் சிகிச்சையால் உயர் ரத்த அழுத்த நோயாளி எந்த வகையில் பயன்பெற முடியும்?இந்த சிகிச்சை மேற்கொள்ளும்போது உயர் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எனக்கூறும் மருத்துவர்கள், நாள் ஒன்றுக்கு 4 முதல் 6 மாத்திரைகள் வரை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்த நோயாளி ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டாலே போதும் என்ற அளவுக்கு மாற்றம் ஏற்படும்.
மேலும், ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 34 சதவீதம் வரையில் தடுக்க முடியும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது ஆக்ஜிசன் அளவு குறைவதால் ஏற்படும் இதய பாதிப்பை 21 சதவீதம் குறைக்க முடியும். இறப்பை 13 சதவீதம் குறைக்கலாம் எனவும் அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அப்பல்லோவில் ஆர்.டி.என் சிகிச்சை மேற்கொண்ட நோயாளி:உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட58 வயதான நோயாளி ஒருவருக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆர்.டி.என் சிகிச்சையில் மேலும் ஒரு புதுமை செய்து அசத்தியுள்ளனர். இந்த நோயாளிக்கு இடது பக்கம் இருக்க வேண்டிய சிறுநீரகம் வலது பக்கம் இலியாக் போஷாவில் இருந்துள்ளது. இதை கண்டுபிடித்த மருத்துவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் அதி நவீன கருவிகள் மற்றும் திறமை வாய்ந்த மருத்து குழுவினருடன் இணைந்து இந்த ஆர்டிஎன் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
உலக அளவில் இதுபோன்ற சிகிச்சையை முதன் முதலில் அப்பல்லோ மருத்துவர்கள்தான் மேற்கொண்டுள்ளார்கள் எனக்கூறப்படும் நிலையில், சிகிச்சைக்கு பிறகு நோயாளி நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்திற்காக 5 மாத்திரைகள் வரை உட்கொண்டு வந்த அவர் தற்போது 2 மாத்திரைகள் மட்டுமே எடுத்துக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.டி.என் சிகிச்சை மேற்கொள்ள எவ்வளவு செலவாகும்?இந்த சிகிச்சைக்கான செலவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர்கள், ரத்த அழுத்தம் வந்தால் ஏற்படக்கூடிய இணை நோய்களில் இருந்து நோயாளியை காக்க செலவாகும் தொகையை விட இந்த ஆர்டிஎன் சிகிச்சைக்கான செலவு குறைவுதான் எனக்கூறியுள்ளார். சுமார் ரூ.5 லட்சம் வரை செலவாகும் எனக்கூறிய மருத்துவர், மருத்துவ காப்பீடுகள் மூலமும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் மீண்டு வருவது மிகவும் கடினம்: மருத்துவர் கூறுவது என்ன? - World No Tobacco Day