சென்னை: சென்னையில் அமைந்துள்ள பிரபல தீம் பார்க்கில் (பொழுதுபோக்கு விளையாட்டுத் திடல்) சுற்றுலா வந்த இரண்டு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு விளையாட்டு தலமான தீம் பார்க்கிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும், விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள்.
இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு தீம் பார்க்கிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமிகள் இருவரும் இறுதியாக நீர் சறுக்கில் விளையாடியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, விளையாடும் நபர்களை தண்ணீரில் இருந்து மேலே அனுப்ப, அப்பகுதியில் தீம் பார்க் ஊழியர் ஒருவர் பணியில் இருப்பது வழக்கம். அப்படி, அந்த பகுதியில் சென்னை பனையூரைச் சேர்ந்த சுரேந்தர் (வயது 31) என்ற இளைஞர் பணியில் இருந்துள்ளார். அப்போது, தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதனால் சிறுமிகள் அங்கே கூச்சலிட்டு தாயிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சவுக்கு தோப்பில் சிறுமியிடம் அத்துமீறல்... 2 இளைஞர்கள் போக்சோவில் கைது!
அதனைத் தொடர்ந்து, அவர்கள் பொழுதுபோக்கு விளையாட்டுத் திடல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த சம்பவம் தீம் பார்க்கில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை விசாரணை செய்த நீலாங்கரை போலீசார், போக்சோ வழக்கு என்பதால், அதை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் (ஜன.20) ஊழியர் சுரேந்தரை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது நடத்திய விசாரணையில், புகாரில் குறிப்பிட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.