நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகளைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் முதுமலைக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் வீசி செல்லும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள் மற்றும் மதுபான பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கழிவுகளை வீசி செல்லும் பயணிகள்:
இதனால், வன விலங்குகள் பெரும் ஆபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாலையோரம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்களை வனத்துறையினர் அப்புறப்படுத்தினாலும் வனப்பகுதிகளுக்குள் சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை வீசி செல்வதால் அதைச் சாப்பிடும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
மது பாட்டிலை எடுத்த யானை குட்டி:
இந்த நிலையில், முதுமலை வனப்பகுதியில் தாய் யானையுடன் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த குட்டி யானை ஒன்று அதன் தும்பிக்கையால் தரையிலிருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தாய் யானையுடன் மற்றொரு யானை மரக்கிளைகளையும் புற்களையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், குட்டி யானை புற்களுக்கு இடையே கிடந்த மது பாட்டிலைத் தும்பிக்கையால் எடுத்து வாயில் வைத்துச் குடிக்க முயற்சித்துள்ளது. இந்த காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் சிலர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். தற்போது யானைக் குட்டி தொடர்பாக வீடியோ காட்சி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை இளைஞர் இறப்பில் சந்தேகம் - ஆணவ படுகொலை என உறவினர்கள் போராட்டம்!
வீசப்படும் குப்பைகள்:
வனப்பகுதியில் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் சுற்றுலாப் பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை முழுமையாக அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பிரதான சாலைகளில் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்:
ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதி குழுக்கள் அவ்வப்போது முதுமலை வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.