இனி தனியார் மருத்துவமனையிலும் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி.. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் நடவடிக்கை! - MUTHULAKSHMI REDDY MATERNITY SCHEME - MUTHULAKSHMI REDDY MATERNITY SCHEME
MUTHULAKSHMI REDDY MATERNITY SCHEME: தனியார் மருத்துவமனைகளை டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் இணைப்பதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளும் நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் பெற முடியும்.
சென்னை:டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் (MRMBS) கீழ், தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் பணியை பொது சுகாதார இயக்குநரகம் தொடங்கியுள்ளது.
முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டம் 2017ஆம் ஆண்டு வரை அரசு மருத்துவமனைகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவச சுகாதார சேவைகளைப் பெறுபவர்களுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
2018ஆம் ஆண்டில், இது மத்திய அரசாங்கத்தின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவுடன் (Pradhan Mantri Ma-tru Vandana Yojana) இணைக்கப்பட்டது. இந்நிலையில், 2006 முதல் 2024ஆம் ஆண்டு வரை 1.20 கோடி கர்ப்பிணிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரூ.10 ஆயிரத்து 841 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு கூறியுள்ளது.
இத்திட்டம் தனியார் மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளும் நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களைப் பெற முடியும்.
தவணை முறை:கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்திற்குள் ஆரம்ப சுகாதார செலிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களை தெரிவித்து பெயரை பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு 14 ஆயிரம் பணமும், 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகங்களும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு முதல் நான்கு மாதத்திற்குள் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், கர்ப்பிணிகளின் உடல் திறனை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, 6வது மாதத்தில் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்படுகிறது. மகப்பேறு காலம் முடிந்து நான்காவது மாதத்தில் இரண்டாவது தவணையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, குழந்தை பிறந்த ஒன்பது மாதத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.