இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரித்து பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிரா புனேவில் குய்லின் பாரே சிண்ட்ரோம் (Guillain barre syndrome - GBS) என்னும் நரம்புகளை பாதிக்கும் நோய் தாக்குதல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 101 நபர்களுக்கு GBS நோய் தொற்று உறுதியான நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் 16 நோயாளிகள் வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். GBS நோய் தொற்று நேரடியாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதில்லை என்றாலும், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் பரவுவதைக் கருத்தில் கொண்டு கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டாக்டர் பி.ரங்கநாதன். இந்த நோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை பற்றிய முழுமையான விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
குய்லின் பாரே சிண்ட்ரோம் என்றால்?: Guillain-Barre syndrome (GBS) என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு புற நரம்புகளைத் தாக்கும் ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். இது திடீர் தசை பலவீனம் மற்றும் உணர்வின்மைக்கு வழிவகுக்கிறது. இந்த நிலை எல்லா வயதினரையும் பாதிக்கலாம், ஆனால் இது பொதுவாக இளைஞர்கள் மற்றும் இளம்வயதினரை அதிகம் பாதிக்கிறது. இந்த தொற்றுக்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளால் இது அடிக்கடி தூண்டப்படுவதாக மருத்துவர் கூறுகிறார்.
அறிகுறிகள்: குய்லின் பாரே சிண்ட்ரோம் பொதுவாக கால்கள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு மற்றும் பலவீனத்துடன் தொடங்கி கைகள், மார்பு, கழுத்து மற்றும் முகம் போன்ற பகுதிகளுக்கு பரவுகிறது என்கிறார் டாக்டர் பி. ரங்கநாதன். இந்த நிலை தீவிரமடைந்தால், தசை பலவீனம் பக்கவாதமாக மாறும் நிலை உள்ளது.
பாதுகாத்துக் கொள்ளும் முறை:
- தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்கவும்
- காய்கறி மற்றும் பழங்களை பயன்படுத்துவதற்கு முன் நன்கு கழுவவும்
- இறைச்சிகள் 100 சதவீதம் சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்
- பச்சையாக இருக்கும் அல்லது முழுவதுமாக வேகாத இறைச்சிளை சாப்பிட வேண்டாம்
- அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்
- சுகாதாரமற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்
- மற்றவர்கள் பயன்படுத்திய பொருளை பயன்படுத்தாமல் இருப்பது
- சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை அருகில் வைக்க வேண்டாம்
இதையும் படிங்க: ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்! தடுப்பது எப்படி?
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்