சென்னை: தமிழ்நாட்டில் மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இப்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசின் அல்லது தனியாரின் வழக்கமான பேருந்து சேவை இல்லாத இடங்களில் 17 கி.மீ. தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பேருந்து சேவை இருக்கும் இடங்களில் 8 கி.மீ வரை தனியார் மினிப்பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் மினி பேருந்து சேவையை விரிவாக்க புதிய விரிவான திட்டம் தமிழ்நாடு போக்குவரத்துறையின் சார்பில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. பின்னர், இதன் மீது பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் இப்போது புதிய விரிவான திட்டத்தில் மினி பேருந்து சேவையை ஒருங்கிணைக்கப்பட உள்ளது. புதிய திட்டத்தின் படி இனி 25 கி.மீ வரை மினிப்பேருந்து இயக்கப்படலாம் என்றும், தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சம் 18,723 பேருந்துகளும், அதிகபட்சமாக 25,000 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டம் வரும் மே ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதையும் படிங்க: "தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்பது வலதுசாரி அரசியல் நாடகம்" - திருமாவளவன் பதிலடி!
இது குறித்து கடந்த 24ஆம் தேதி வெளியிட்ட அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலா 2 கி.மீ வீதம் ஒரு நிறுத்தம் என்ற முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 2 கி.மீ வரையிலான முதல் நிறுத்தத்துக்கு ரூ.4 எனவும், 4 கி.மீ வரையிலான இரண்டாவது நிறுத்தத்துக்கு ரூ.4 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 கி.மீ வரை மூன்றாவது நிறுத்தத்துக்கு ரூ.5 எனவும், 8 கி.மீ வரை நான்காவது நிறுத்தத்துக்கு ரூ.6 எனவும் புதிய கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது, 4 கிலோ மீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
நிறுத்தம் | கட்டணம் |
1 (2 கி.மீ வரை) | ரூ.4 |
2 (4 கி.மீ வரை) | ரூ.4 |
3 (6 கி.மீ வரை) | ரூ.5 |
4 (8 கி.மீ வரை) | ரூ.6 |
5 (10 கி.மீ வரை) | ரூ.7 |
6 (12 கி.மீ வரை) | ரூ.8 |
7 (14 கி.மீ வரை) | ரூ.9 |
8 (16 கி.மீ வரை) | ரூ.9 |
9 (18 கி.மீ வரை) | ரூ.9 |
10 (20 கி.மீ வரை) | ரூ.10 |
4ஆவது நிறுத்தத்துக்கு 8 கி.மீ வரை ரூ.6 எனவும், 5ஆவது நிறுத்தத்துக்கு ரூ.7 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. 6ஆவது நிறுத்தத்துக்கு 12 கி.மீ வரை ரூ.8 எனவும், 7ஆவது, 8ஆவது, 9ஆவது நிறுத்தங்களுக்கு முறையே 14 கி.மீ, 16 கி.மீ, 18 கி.மீ தூரத்துக்கு ரூ.9 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 ஆவது நிறுத்தத்துக்கு 20 கி.மீ தூரம் வரை ரூ.10 எனவும் கட்டணம் வசூலிக்கப்படும்," என்று அரசு அறிவித்துள்ளது.
மினி பேருந்துகளுக்கான கட்டண நிர்ணயம் வரும் மே மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.