சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த சட்டப்பேரவையில் இரண்டு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டத் தொடரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒன்றிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பாரதிய நகரி சுரக்ஷா சன்ஹிதா (BNSS) ஆகிய சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து, மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஏற்கனவே உள்ள பிரிவுகளில் இருந்து வந்த தண்டனைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை, பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, பாலியல் நோக்கத்துடன் மறைந்து இருந்து பார்க்கும் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள், 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை உள்ளிட்ட சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அந்த மசோதாக்களுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் திருத்த சட்டம் கடந்த 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இதன்படி, இந்த குற்றங்களுக்கு முதல் தண்டனையாக 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் மறைத்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.