சென்னை: ஆண்டுதோறும் மே மாதம் 30ஆம் தேதி ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம்’ (Multiple Sclerosis Day) அதாவது "தண்டுவட மரப்பு நோய் தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது. இது World MS Day என்றும் அழைக்கப்படுகிறது. தண்டுவட மரப்பு நோய் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடைபிடிக்கப்படுகிறது. ‘தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரின் ஆதரவும், குடும்பத்தினரின் ஆதரவும் இருக்கும் பட்சத்தில் இந்த நோயை எளிதாக வென்று விடலாம்’ என்பதே இந்த வருட தண்டுவட மரப்பு நோய் தினத்திற்கான கருப்பொருளாகும்.
தண்டுவட மரப்பு நோய் நரம்புகளுக்கு சேதம் மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த அறிகுறிகள் கடுமையாகும் பொழுது நோயாளியால் நடக்க முடியாமல் போகலாம். தண்டுவட மரப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் அறிகுறிகளை விளக்குகிறார் சென்னை ரேலா மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஸ்ரீவித்யா.
தண்டுவட மரப்பு நோய்:இது குறித்து அவர் கூறியதாவது, “தண்டுவட மரப்பு நோய், ஆட்டோ இம்யூன் சிஎன்எஸ் டிமைலினேட்டிங் நோய் (Autoimmune CNS demyelinating disease) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஆட்டோ இம்யூன் என்பது, நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி என்பது, நமக்கு சாதகமாக இல்லாமல், எதிராக செயல்படும் நிலையை குறிக்கிறது. அதாவது நாம் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் போது வெளியில் இருந்து வரும் கிருமிகள் அல்லது வைரஸ்கள் நமது உடலை தாக்கும்.
அப்போது அந்த கிருமிகளை, நமது உடலில் உள்ள இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்கள் தாக்கும். இது தான் இயல்பு. ஆனால் ஆட்டோ இம்யூன் ஏற்பட்டால். நமது வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்கள் நமது உடலில் உள்ள நல்ல திசுக்களை தாக்கும். எளிதாக சொல்ல வேண்டுமானால், நமது நோயெதிர்ப்பு மண்டலமே நமக்கு எதிராக செயல்படுவதாகும். டிமைலினேட்டிங் (demyelinating) என்பது நமது நரம்பு செல்களை சுற்றியுள்ள உடலுக்கு அவசிமான மையலின் (Myelin) என்ற உறை முற்றிலுமாக அழிந்து போவதைக் குறிக்கிறது.
எதனால் ஏற்படுகிறது:நமது நோயெதிர்ப்பு மண்டலம், மையலின் என்ற நரம்பு செல் உறையை தாக்குவதால் தண்டுவட மரப்பு நோய் ஏற்படுகிறது. இது முக்கியமாக மூளையையும், முதுகு தண்டுவட பகுதியையும் தான் அதிகமாக தாக்கும். இளம் வயதினரை அதிகமாக தாக்குகிறது. ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.