சென்னை:மாதவிடாய் என்பது மாதம் தோறும் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு சவாலான காரியம். சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பதுபோல் இதுவும் உடலில் நடக்கும் ஒரு சாதாரண விஷயம் தானே எனப் பலரும் நினைக்கலாம். ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம். ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலமும் பெண்களின் மாதவிடாய் தொடர்பான விஷயங்களோடு இணைக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.
பிறப்புறுப்பு தொற்று, பாலியல் ரீதியாகப் பரவும் தொற்று உள்ளிட்ட பல்வேறு சிக்கலான நோய்கள் பெண்களின் மாதவிடாயோடு தொடர்புப் படுத்தப்படுகிறது. இது குழந்தை பிறப்பு, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திலும் மாதவிடாயின் தலையீடு இருக்கிறது.
அதாவது ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 113 ஆயிரம் டன் மாதவிடாய் கழிவுகள் சேர்வதாக இந்தியக் கழிவு மேலாண்மை வாரியம் கூறியிருக்கிறது. இந்த சூழலில்தான், தொற்று நோய், பெண்களின் சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் மென்சுரல் கப் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாதவிடாய் கோப்பை (menstrual cups) தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் அவர்கள் மேற்கொண்ட முக்கிய நோக்கம் இதன் பயன்பாடு பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்துமா? என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை வைத்து இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட பெண்களுக்கு மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்தவும், மற்றவர்களுக்குப் பேடுகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. ஆறு மாதங்கள் வரை இந்த முறை மேற்கொள்ளப்பட்டு, பெண்கள் பலர் பாலியல் ரீதியாகவும் ஈடுபாட்டுடன் இருந்துள்ளனர். ஆய்வின் முடிவில் மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்திய பெண்களின் பிறப்புறுப்பு தொற்று 35 சதவிகிதமும், மிகவும் பொதுவான பாக்டீரியா தொற்று மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளில் 52 சதவிகிதம் குறைந்திருந்தது.
மேலும், மென்சுரல் கப் பயன்படுத்துவதன் மூலம் பேடுகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுச் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், தங்கள் பிறப்புறுப்பில் மென்சுரல் கப்புகளைச் செருகி வைப்பதன் மூலம் உதிரம் மற்றும் அதனுடன் வெளியாகும் கழிவுகள் சுத்தமாகச் சேகரிக்கப்படுகிறது. பிறகு அதை வெளியே எடுத்துக் களைந்து விட்டு சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் பெண்களின் பிறப்புறுப்பு சுகாதாரம் பேணி பாதுகாக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி, பேடுகள் மற்றும் துணிகளைப் பயன்படுத்தும்போது ஈரத்தால் ஏற்படும் அரிப்பு, ஒவ்வாமை, சூடு போன்ற விஷயங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். அது மட்டும் இன்றி மாதம் தோறும் பேடுகள் வாங்கும் செலவும் சேமிக்கப்படும். இத்தனை நன்மைகள் மிக்க மென்சுரல் கப்புகளை அனைத்து பெண்களும் பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதே சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.
இதையும் படிங்க:மாதவிடாயின்போது ஏன் கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது? காரணம்.. தீர்வு..! - How To Control Menstrual Cramps