இட்லி/தோசை மாவு புளித்து விட்டதா? இதை கொஞ்சம் கலந்து பாருங்க..சக்சஸ் தான்! - SOUR IDLI BATTER TIPS - SOUR IDLI BATTER TIPS
SOUR IDLI BATTER TIPS: இட்லி அல்லது தோசை மாவு புளித்து விட்டது என்று தூக்கி கொட்டிவிடுகிறீர்களா? அப்படி செய்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மீண்டும் அந்த மாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.
ஹைதராபாத்: வார இறுதி நாட்கள் வந்தால் போதும், அனைவரது வீட்டிலும் ஒரு வாரத்திற்கு தேவைப்படும் இட்லி மற்றும் தோசை மாவுகளை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறோம். அப்புறம் என்ன, தினமும் காலை, இரவு என எப்போது கேட்டாலும் இட்லியும் தோசையும் தான்.
ஆனால், வாரத்தின் கடைசி மூன்று நாட்களை நோக்கி செல்லும் போது, சில நேரங்களில் மாவு புளித்து விடுகிறது. பலர் அதை தூக்கி கொட்டியும் விடுகிறார்கள். ஆனால், சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் புளித்த மாவை கூட நன்றாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. புளித்த மாவை மறுபடியும் பயன்படுத்துவதற்கான சில டிப்ஸை தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுது: இட்லி மாவு புளிக்க ஆரம்பித்தால், சிறிது இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுதை புளித்த மாவில் சேர்க்கவும். இப்படி செய்வதால், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயில் உள்ள தன்மை மாவின் புளிப்பை குறைக்க உதவுகிறது. தோசை மாவிற்கும் இந்த டிப்ஸைப் பயன்படுத்தலாம்.
சர்க்கரை அல்லது வெல்லம்: புளித்த இட்லி அல்லது தோசை மாவைப் பயன்படுத்துவதற்கு முன் ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும். இதனால், புளிப்பு சுவை குறைந்து மாவின் சுவை அதிகரிக்கிறது.
அரிசி மாவு: இட்லி மாவு புளித்துவிட்டதாக தோன்றினால், இந்த முறை அதனுடன் சிறிது அரிசி மாவை சேர்க்கவும். இப்படி செய்வதால் புளிப்புத் தன்மை குறைகிறது. அரைத்த மாவில் அரிசி மாவை சேர்ப்பதால் சுவை குறையும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் இப்படி செய்வதன் மூலம் இட்லி மென்மையாக வரும்.
புதிய மாவு சேர்க்கவும்: புதிய இட்லி அல்லது தோசை மாவு இருந்தால், புளித்த மாவில் இதனை கொஞ்சம் சேர்க்கவும். இப்படி செய்வதால் புளிப்பு தன்மை நீங்குவது மட்டுமல்லாமல் மாவும் வீணாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மாவு புளிக்காமல் இருக்க சில டிப்ஸ்:
மாவு அரைக்கும் பொழுது தேவைக்கு அதிகமாக உப்பை பயன்படுத்துவதால், சில நேரங்களில் மாவு வேகமாக புளிக்க தொடங்கிவிடுகிறது. எனவே, ருசிக்குத் தேவையான அளவு உப்பை பயன்படுத்த வேண்டும்.
வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில், மாவு நான்கு மணி நேரத்திற்குள் புளித்து பொங்கிவிடும். இதனால், இரவு முழுவதும் மாவை வெளியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், இடையிடையே மாவை சரி பார்க்க வேண்டும். குளிர் காலத்தில், எவ்வளவு மணி நேரம் ஆனாலும் கூட மாவு புளிக்காது. இந்த நேரத்தில், மாவின் அளவு இரட்டிப்பாக மாறினால், அது நன்கு புளித்து விட்டதாக கருத்தப்படுகிறது.
ஒவ்வொரு முறையும், தோசை அல்லது இட்லி செய்யும் பொழுது குளிர்சாதனப்பெட்டியில் இருந்து மாவை வெளியே எடுத்து வைப்பது வழக்கம் தான். ஆனால், இப்படி செய்வதன் மூலம் மாவு வேகமாக புளித்து விடும். அதனால், மொத்த மாவையும் வெளியே எடுத்து வைக்காமல், தேவையான அளவு மட்டும் வெளியே எடுத்து பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
உளுத்தம் பருப்பை அதிகமாகப் பயன்படுத்தினாலும், மாவு வேகமாக புளிக்க வாய்ப்புள்ளது. காரணம், உளுத்தம் பருப்பு நொதித்தல்(Fermentation) செயல்முறையை வேகப்படுத்துகிறது. எனவே, அதிகம் உளுத்தம் பருப்பு பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தோசை சுவையாக மற்றும் மென்மையாக வர வேண்டும் என்பதற்காக வெந்தயம் பயன்படுத்துகிறோம். ஆனால், இவற்றை அதிகமாக சேர்ப்பதால் மாவு வேகமாக புளித்து விடுகிறது. எனவே, கவனமாக பயன்படுத்துங்கள்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.